Sunday 14 September 2014

இந்த மனம்


அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
 காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது 

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக 
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் 
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை 
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் 

போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை 
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு 
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை  இந்த மனம் 

சருகுகளின் பாதியிலே வாழ்கை 
பயணித்தாலும் பசுமை புற்களின் 
பச்சை வாசம் மறக்கவில்லை  இந்த மனம் 

அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
 சிரிக்கும் நேரம் வருகையில்  சிரிப்பை 
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம் 

வலியோடு வாழ்க்கை வரமறுத்து 
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் 
அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை 
தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் 

மணி நேரமெல்லாம் மரண வழியாக 
தோன்றினாலும் ஒரு நிமிடம் மலரின் 
முக மலர்சியாய் சிரித்து மகிழும் இந்த மனம்  

தன்னம்பிக்கையோடு தைரியமாய் 
விடாமுயற்சியோடு தன் பாதை  நோக்கி 
பயணத்தை தொடரும் இந்த மனம் 
சில நேரம் என்னையே  பெருமை பட வைக்கிறது.

....கவியாழினிசரண்யா... 

Sunday 24 August 2014

நெருப்புக் கூண்டு

பறந்து விரிந்த உலகுதன்னில் - சிறகடித்த 
பறவையிவள் எண்ணங்களை எடுத்து 
எரிதீயில் போட்டு பொசுக்குகின்றனர்- சமுதாய 
எதிர்ப்பார்ப்பென்று என்னை ஏமாற்றி 

அறிவு சுரங்கத்தில் அருளிய - பொருளென்று 
அறத்தோடு வளர்த்து அழகுநடைபோட 
புகழ் முன்னேற்றம் பெண்ணிற்கு - வேண்டாமென 
புழுகலேற்றம் மனதில் நிரப்புகிறார்கள் 

பருவ வயதினிலே முடித்திடனும் -திருமணம் 
பக்குவமாயென்று பனிக்கட்டியாய் உருக்கி 
மயக்குகின்றனர்; பள்ளி வயதிலே -பதியம்போட்டு 
மனதில் பசுமரத்தாணியான என்லட்சியத்தை 

உண்மைகளை எடுத்துக் சொன்னால் - ஊரார்க்கு 
உணராத வாயாடியென்று பெயர் 
தற்காப்புக் கலை கற்று - நடைபோட்டால் 
தகாத அடங்காப்பிடாரி இவள் 

சுதந்திரமென சுற்றித்திரிந்து சுடும் -பாதைச்செல்ல 
சுரத்தை இல்லாத பெண்ணல்ல 
அடைப்பட்ட கூண்டில் சுதந்திரமுடன் - வாழ 
அடிமை பெண்ணும் நானல்ல 

சுதந்திர நாட்டினில் சுதந்திரமுடன் - என் 
கூண்டின் சுற்றுத்தளம் என்சுதந்திரம் 
நெகுகிறது என்மனம் ; திறமைகள்  பொசுங்க 
நெருப்பிலிட்ட என்மனம் வேகுகிறது 

(சமூகமென்னும் நெருப்புக் கூண்டுக்குள் அடைப்பட்டு நானிங்கு ,என முன்னேற துடிக்கும் ஒரு பெண்ணின் குமுறல்கள் ) 
...கவியாழினி...

Saturday 23 August 2014

கடிதங்கள்


கட்டுக்கடங்கா பாசத்தையும் 
கணிக்க இயலா நேசத்தையும் 
சொல்லி முடிக்க முடியாமல் 
சொல்லாமலே அறியவைக்கும் 

எண்ணிலடங்கா எண்ணங்களின் 
வெளிப்பாடாய் எத்தனையோ 
உறவுகளின் குவியலாய் 
தொன்று தொட்டு தொடர்ந்து வந்த 

தொய்வில்லா நன்றிமறவா பண்பாடது 
ஓர் ஊரனைத்தும் விசாரித்து முடியாமல் 
ஓர் ஓரத்திலும் நுணுக்கி எழுதிவிசாரிக்கும் 
வரும் நாளை எதிர்ப்பார்த்து 

வந்து வந்து எட்டிப்பார்க்கும் சுகம் 
வந்துசேர்வதை எண்ணி 
வயது பெண் முதல் 
வயதான மூதாட்டி வரை 
காத்திருந்து கையில் பெரும் சுகம் 

முன் தெரு மல்லிகா அக்கா முதல் 
முள்ளுக்காட்டு முனுசாமி அண்ணன் 
வரை நலம் விசாரித்து 

பண்பாய் வீட்டு பசு கன்றையும் 
பக்கத்து வீட்டு கந்தசாமி 
தாத்தாவின் கைத்தடி வரை 

தன் கண்மூடாமல் கணக்கிட்டு விசாரித்து 
தன் கையில் வைத்திருக்கும் 
பேனாவின் மை தீரும் வரை 

தீட்டி முடித்து பின்பும் அதை 
விட்டுட்டனே என்று புலம்பி தீட்டும் 
ஓரத்தில் நுணுக்கி விசாரிக்கும் அன்பு 

காவல் தெய்வமாய் கண்ணுக்கு தெரியும் 
காவி உடை அணிந்த தபால்காரர் 

என் பையன் எழுதிருக்கான் படித்து சொல்லடி 
என் தங்கம் என்று பேத்தியை கொஞ்சும் பாட்டி 
கணவனின் விசாரிப்பை படித்து கண்ணீரில் 
கண் நேரில் பார்த்த மகிழ்சியில் 
காகிதத்தை கட்டியணைக்கும் மனைவி 

இது அனைத்திலும் நிரம்பி வழியும் 
ஒன்றேஒன்று இந்த கள்ளமில்லா 
உள்ளங்களின் கணிக்க முடியா அன்பு 

அந்த காலத்தில் எழுதிய 
கடிதங்களை பிரதி எடுத்தால் 
அவை இக்கால நீண்ட முழு தாளின் 
நான்கு பக்கம் நிறையும் 

அத்துணையும் அழகான அன்பின் ஏக்கங்கள் 
ஆசையாய் எடுத்து படித்தேன் அந்தக்காலத்தில் 
ஆறுதலாய் வந்து போன கடிதாசி 
என்ற கடிதங்களை ஏக்கத்தோடு ... 

...கவியாழினிசரண்யா..


Sunday 27 July 2014

நின்னோடு என் நினைவுகள்

நீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை 
நீ என்னோடு இருப்பதான நினைவுகள் 
தோற்கடிக்கின்றன ; நீ என்னோடு 
இல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற 
நிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ 

கடற்கரை மணலில் என் கால்தடங்களின் 
அருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி 
இல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே 
எண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான் 

என்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ 
சப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள் 
எழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய் 
வீணை மீட்டிகொன்டே இருக்கிறது 

வருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும் 
சித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன் 
உன் மார்பின் கதகதப்பில் என் தலை வைத்து 
உறங்கிய அந்த சிறு நாட்களோடே ஒவ்வொரு 
இரவும் உறக்கம் கொள்கிறேன் நான் 

எவ்வளவு சோகங்கள் என்னை சூழ்ந்தாலும் 
உன்னோடு வாழ்ந்த நாட்கள் மனதில் ஓட 
மகிழ்ச்சி கொட்டும் ;எத்துனை வேகமாக வந்தாலும் 
என்னை தாண்டி செல்ல மறுக்கிறது உன் நினைவுகள் 

எல்லாவித அழகு ஆடைகளை வாங்கியும் 
அழகு குறைந்தே தோன்றுகிறது பெட்டியில் 
பொக்கிசமாய் உறங்கும் நீ வாங்கித்தந்த 
பாவாடை சட்டையின் அழகின் முன் 

அந்நாட்களில் களைத்து இறங்கி வந்து 
இழைத்த உடம்போடு உணவு உண்கையில் 
உழைத்த உன்மீது வரும் வியர்வை நறுமணத்தை 
வாசித்துகொண்டே இந்நாட்களில் தினமும் 
உண்கிறேன் என் மதிய உணவை 

ஊராரும் உடனிருப்போரும் நீ இல்லையெனலாம் 
என்னுள்ளிருக்கும் உன்னை என்னையன்றி 
உன்னால் கூட உணரமுடியாது "அப்பா " -இவள் 
உன் உணர்வுகளை சுவாசித்து வாழ்வைநேசிப்பவள் 

நான் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தாலும் 
என்றும் நின்னோடு என் நினைவுகள். 


...கவியாழினிசரண்யா...

Sunday 20 July 2014

நட்பெனும் நண்பனுக்கு


என்கதை பல உன்னிடம்  சொல்லிட வார்த்தை தேடுகையில் 
அத்துனை வார்த்தைகளும் இல்லாது மறைந்து 
உன் அன்பெனும் மனம், புரிந்துகொள்ளும்படி -நான்  
மௌனத்தை மட்டும் உதிர்க்கிறேன் எப்போதும் 

முகத்தில் போலிஇல்லா புன் சிரிப்போடு ,
மனதில் கள்ளமில்லா உண்மை அன்போடு ,
எண்ணத்தில் களங்கமில்லா நல் நட்போடு - தொடரும்
உன் நட்பில் நடைபோடுகிறேன் நாட்களோடு

மாயகண்ணனின் புல்லாங்குழல்  இசை 
மனதில் காதல் சொட்டவைக்கும்  ராதைக்கு
மனம் நிறைந்த நண்பன் உன் வார்த்தைகள் -தன்னபிக்கை 
மரம் வளர்க்கும் நட்போடு  இந்த தோழிக்கு 

மகிழ்ச்சியோடு மனம் நினைப்பதெல்லாம்   
காட்சியாக  தருமாம் கதைகளில் சொர்க்கம் 
என் மனம் காண்கிறது மகிழ்ச்சி நிறைந்து - என்றும்
உன் நட்பால் நிஜ வாழ்வில் சொர்க்கம்.

                           ...கவியாழினி சரண்யா ...

Sunday 13 April 2014

ஊர்வலம்


திருவாரூர் தேர் 
நகர்ந்தால் 
அது 
நகர்வலம் 

பெண்ணே 
நீ 
அங்கு 
நடந்தால் 

அந்த தேரும் 
உன் பின் 
வரும் 
ஊர்வலம் . 

...கவியாழினிசரண்யா ...

Saturday 5 April 2014

தா(பே)ய்மையோடு ஒரு குரல்


மும்மாரி பொழிய வைத்து 
கம்மாவும் நிரம்ப வைத்து 
முத்தாக தானியம் 
விளைய வைத்து 
சுத்தமாக சுவாசிக்க வைத்தேன் 
என் ம(மா)க்களே 

சத்தான உணவோடு 
புத்தியும் தூண்டிவிட்டு 
அறிவியலும் கற்க 
அறிவு வளர்த்தேன் 
ஆக்கங்கள் பெருகிடவே 
களிப்பும் கண்டேன் 
அழிவுகளை அதிகமாக்கி 
ஆடம்பரத்தில் அமிழ்ந்தீர்களே 
என் அன்(வம்)பிற்க்குறியவர்களே 

வண்ண உணவுகளும் 
வாகன பெருக்கமும் 
குளிர்பதன சாதனமும் 
நிமிடத்தில் நிமிரும் உற்பத்தியும் 
அபார வளர்ச்சியென்று 
அடுக்கடுக்காய் மரங்களை 
வெட்டி வாழும் 
என் பி(தொ)ள்(ல்)ளை(லை)களே 

மாடிமேல் மாடியென 
பாரத்தை என் தலையில் வைத்து 
விரைவாக சென்றுவர சுரங்கம் வைத்து 
கழிவுகளை நிரப்பிடவே 
பாதாளத்தில் கொட்டி 
வாழும் மரங்களை வெட்டி 
வலுவான என்னை 
வலுவிழக்க வைத்தீர் 
என் செல்வ(ஜென்ம )ங்களே 

வலி பொருத்து வாழ வைத்தேன் 
வலி தாங்க முடியாமல் போகவே 
பேரழிவுதர ஆட்ப்படுத்தப்பட்டேன் 
இனி என் நிலை என் கையிலில்லை 
வசதிதேடி வாழுமுன்னே - இயற்கை 
வளம் காத்து வாழ்வை வாழப்பாருங்களேன் 
என் மதி(கெ )கொண்(ட்)ட மானிட(ரே)னே. 
  ...கவியாழினிசரண்யா... 


Thursday 20 March 2014

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

  
பணப்பெட்டி 
வாங்க 
ஆசைகொண்டு 

தீப்பெட்டி 
அடுக்கி 
வாழ்ந்து 

ரண(ம்)கெட்டியாக 
நிலை 
கடந்து 

கனபெட்டியாய் 
செல்ல 
முடிகிறது 

எங்கள் 
வாழ்க்கை 
சவபெட்டியில். 

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

...கவியாழினி...

Wednesday 12 March 2014

எல்லையற்ற கடலின் ஓர் அலை


பத்துமாதமாய் வயிற்றில் 
தங்கி பிறந்தவனெ(ளெ)ன்றா 
மொத்தமாக கயிற்றில் 
உயிரை விட வந்தாய் ---இல்லை 

ஒரு துளி விந்தில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒரு துளி விசத்தில் உயிரை 
மரிக்க துணிந்தாய் ---இல்லை 

இருவரின் சக்தியும் ஒன்றாகி 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒருவனா(ளா)ய் கத்தியில் 
உயிரை பிரிக்க வந்தாய்---இல்லை 

உன் பெற்றோரின் உடல் 
சூட்டில் பிறந்தவனெ(ளெ)ன்றா 
நெருப்பின் சூட்டில் 
பஸ்பமாக வந்தாய் ---இல்லை 

பனிக்குட நீரில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
பலகுட நீரென கடலில் 
மூழ்க வந்தாய் ---இல்லை 

தலைகீழாய் இவுலகில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
தலைகீழாய் மலையில் 
விழ வந்தாய் ---உணர்வாயோ 

இரு உடல்களின் காமத்தால் 
பிறக்கவில்லை நீ 
இரு உள்ளங்களின் சங்கமத்தால் 
மண்ணில் பிறந்தாய் 

உள்ளுறுப்புக்களின் மாற்றத்தால் 
பிறக்கவில்லை நீ 
உணர்வுகளின் உச்சத்தில் 
உலகில் பிறந்தாய் 

வாழ்வின் வலி தாங்காமல் 
வந்தாயே உயிர் விட 
நினைப்பாயோ ஒருநிமிடம் 
உன்னை உயிரோடு ஈன்றெடுக்க 
உன் தாய் அனுபவித்த வலியை-அதை 
தாண்டியா உன் வாழ்க்கை வலிக்கிறது ? 

உற்றவள் உள்ளிருந்து துடிக்க 
தன்னிலையறியாது தவித்த 
உன் தந்தையின் தவிப்பின் 
வலியை விடவா 
உன் வாழ்கை வலிக்கிறது ? 

சிறு உயிரான உனக்கு வலி 
பொருத்து வாழ்வு தந்த 
அந்த தாய்தந்தை வலிக்காக 
வலி நிறைந்த உன் வாழ்வை 
வாழ்ந்து காட்ட மாட்டாயோ 

வாழ்வின் எல்லை உன்னைவிட்டு 
உன் உயிர் பிரியும் வரை அல்ல 
உன் உள்ளத்தை விட்டு 
உன் தன்னபிக்கை பிரியும் வரை 

பரந்த கடலாய் இவ்வுலகினிலே 
ஓயாத அலைகலென 
எல்லோர்க்கும் ஓர் வாழ்வுண்டு 
அதில் உன் வாழ்வும் 
எல்லையற்ற கடலின் ஓர் அலை ... 

...கவியாழினிசரண்யா...

Thursday 6 March 2014

காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே


என் முன்னோர்களின் 
எத்துனை தலைமுறைகள் தாண்டி 
இன்று நானிருக்கிறேன்? 

இந்த உலகம் ஐம்பூதங்களில் 
குடிகொண்டு வாழ்வதை 
ஆன்மீகம் என்கிறார்கள் 

இந்த உலகின் ஐம்பூதங்களை 
ஆராய்ந்து வாழ்வதை 
அறிவியல் என்கிறார்கள் 

தியானித்து உலகை மறந்து 
சமாதி நிலை அடைவதுதான் 
ஆன்மீகத்தின் உச்சமென்றால் 

எப்படியும் மனிதன் ஒரு 
தருணத்தில் சமாதி நிலைக்குத் 
தானாகவே செல்கிறானே 

நித்தம் கண்டுபிடிப்புகளும் 
அழிவுகளும் ஆராய்ச்சிகளும்தான் 
அறிவியலின் உச்சம்மென்றால் 

ஒவ்வொரு கணத்திலும் 
இவ்வுலகில் ஒன்று 
அழிவுக்குள்ளாகியும் 
புதிய கண்டுபிடிப்பாகவும் 
உருவாகிறதே ! 

ஒரு துளி விந்தின் 
வெளியேற்றந்தான் 
ஆழ்ந்த அன்பின் 
உச்சமென்றால் 

அதுவும் சிலநேரங்களில் 
திருப்தியடையாத ஒன்றாக 
மாற்றம் பெருவதேன்? 

இங்கே , 
இறப்பையும் பிறப்பையும் தாண்டி 
சூரிய சந்திர உதயமறைவை தாண்டி 
ஆன் பெண் அன்பை தாண்டி 
ஆன்மிக அறிவியலை தாண்டி 

உலகமென்னும் 
நாடக மேடையில் 
மனிதர்களென்னும் 
கதாபாத்திரத்தில் 
நித்தம் ஒரு நாடகம் 
அரங்கேறிகொண்டே 
இருக்கிறது 

தனக்கு எதிரே ஒரு சபை 
தம் நடிப்பை கண்கொட்ட 
பார்த்து கொண்டிருப்பதை 
உணர்ந்து நடிப்பவன் 
உச்சம் பெருகிறவனாகவும் , 

தானே நடிகன் 
தானே பார்வையாளனென 
நடிப்பவனை எச்சமாக 
நினைக்கவைத்தும் 
இந்த உலகம் என்றும் 
சாதா(சதா)ரணமாகவே 
இயங்கிக்கொண்டிருக்கிறது. 

காலங்கள் முடிந்த பின்பு 
ஆடிய ஆட்டங்கள் மறைந்து 
அமைதியாக செல்கிறான் 
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே... 

...கவியாழினி...

Sunday 23 February 2014

அகவை நூறு


பதினெட்டு மாதத்தில் வடிக்கப்பட்ட சிலையே 
தமிழின் பெருமைக்கு வைக்கமுடியாத விலையே 

பதினெட்டாயிரம் டன் சல்லிகளும் எஃகுஇரும்பும் 
ஐயாயிரம் டன் சாந்தும் கலந்த கலவையே 

வருடங்கள் பல கடந்தும் ஒருமுறையே தன்னை 
புதுப்பித்து மெருகேற்றிய குமரிப்பெண்ணே 

கடல் கொந்தளிப்பு அதிகம் நிகழும் 
பகுதியிலிருந்தும் சமாளித்து பிரச்சனை 
காட்டிகொள்ளாத குடும்ப பெண்ணே 

காலங்கள் கடந்தும் வருவோர்க்கு கம்பீரமாய் 
காட்சி தரும் எழிலோவிய மழலையே 

தனுஷ்கோடி புயலிலும் சிறிதும் ஆட்டம் 
காட்டாமல் வலிமை மிகுந்திருந்த ஆண்மையே 

இரண்டு கிலோ மீட்டரில் கால் நீட்டி உறங்கும் 
வயோதிக கொள்ளு பாட்டியே (தாத்தாவே) 

வருவோரை மடியில் சுமந்து வழிகாட்டி 
உரிய இடம் சேர்க்கும் தாய்மையே 

இந்தியநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் 
இணைக்கும் ஒரே இணைப்பு பாலமென 
சிறந்து விளங்கும் குருவே 

இன்றோடு உனக்கு அகவை நூறு - என்றும் 
சிறக்கும் உன்னால் தமிழனின் பேரு 

...கவியாழினி...

Saturday 22 February 2014

வசந்தம்



வாசித்த உடன் வசந்தம் வருமென்று
யாரோ வடித்த வர்ணனை வதந்தியை
மனதில் வாங்கிக்கொண்டு மலரை
வாசிக்க பறக்கிறது இந்த வண்ணாத்துப்பூச்சி ...
...கவியாழினி...



Monday 10 February 2014

இந்தக்குமரியும் அந்தக்குமரியும்



சிறு வயது ஆசை 
சில்வண்டாய் எப்போதும் 
என்னைச் சுற்றிவரும் 
சில்லென்ற தென்றலாய் 
சிறகுகள் வருடிட 

கண்கள் திறந்தேன் 
ஆசை நிஜமானது 
கன்னியாகுமரியில் நான் 
களிப்போடு நின்றிருந்தேன் 

ஐந்தாம் வகுப்பில் 'உலகம் போற்றும் 
உன்னத குமரி நானும் சென்றேனே' 
தமிழில் படிக்கையிலே 
மனதுள் பதியம் போட்டது 
இன்று மலர்ந்து மணம் பரப்பியது 

கடலின் வாசத்தில் பிறந்து 
கடலோடு வளர்ந்தாலும் 
கடல் என்றும் களிப்பாகவே; 
குமரியிலும் இந்த குமரி 
கடலோடு களிப்புகொண்டேன் 

வங்காள விரிகுடாவில் 
வண்ணமயமாக வளர்ந்தவள் 
இன்று அதன் ஒருகரையை 
முதன் முதலாய் கண்டேன் 

முக்கூடலில் இவளும் 
சங்கமித்தால் நான்காக 
இவளின் மனதின் மகிழ்ச்சி 
அலைகள் ஓயாது 
அடித்துகொண்டே இருந்தது 

என்னை சிறு வயதில் 
சிந்திக்க வைத்தவர் 
மனதுள்ளே வீரத்தை 
ஊட்டியவர் மண்டபத்தில் 
கம்பீரமாய் காட்சி தந்தார் 

என் மனதுள் நிறைந்த அமைதி 
ஆனந்தத்தை எப்படி சொல்ல 
வார்த்தைகள் கிட்டுமோ 

என் மனதுள் இன்னமும் 
பிரமாண்டமாய் நின்றிருப்பவர் 
இங்கும் நின்றுகொண்டிருந்தார் 
அப்படியே திருவள்ளுவர் 

அவரின்பாத நகக் குழம்புக்குள் 
என் கை விரல்கள் எதையோ 
மீட்டிக்கொண்டிருந்தன 
எனக்கும் தெரியாமல் 

இருவரின் ஆசியோடு 
விடை பெற மனமின்றி 
மீண்டும் வருவேனென்ற 
வாக்குறுதி கொடுத்து விடைபெற்றேன் . 

இந்த குமரியால் மறக்கவே முடியாத 
அந்த குமரி மறப்பேனோ என் வாழ்நாள் 
முடிந்தும் இந்நாளை 11.12.13 
11 ம் நாள் ,12ம் மாதம் ,13 ம் வருடம் 

...கவியாழினிசரண்யா ...

Friday 3 January 2014

பால்வழியில் பாவையிவள்


பால்வழியில் பாவையிவள்  
வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் 
வட்டமிட்டு பறந்துவர 
நட்போடு என்னை அழைத்துச்சென்று
இறக்கிவிட்டன 

வெண்பஞ்சு வானமென்னும் 
மெத்தையிலே நானும் விழ 

புகை மண்டல தேவதைகள் 
கைப்பிடித்து அழைத்துச்செல்ல 

வானவில்லால் கட்டிய நிலவு 
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன 

நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து 
ஒன்றுகூடி ஒளி வீச 

சூரியனும் தூர நின்று கடும் 
குளிரை மறையச் செய்ய 

பூமி வந்து அருகமர்ந்து 
பசுமைஎன்னும் விசிறி வீச 

கோள்களெல்லாம் என்னை 
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட 

பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது 
இவளுக்கு உணவு பரிமாற்றம் 

வானின் விண்கற்கள் இவள் நடைபயில 
இடம் விட்டு நகர்ந்து செல்ல 

குளிர்காற்று செல்லமாக மெல்ல வந்து 
அந்த பல்லாக்கு ஊஞ்சலில் ஆட்டிவிட 

மேகம் சூழ்ந்த தென்றலது தாலாட்டுபாடிட 
கண்ணுரங்கினேன் நான் கண்ணுரங்கினேன் 

விழித்துப்பார்த்தேன், வாழ்ந்துகொண்டிருந்தது 
வானுலகமல்ல கனவுலகமென்று உணர்ந்தேன் 

பால்வழியில் பாவையிவள் மனம்மகிழ்ந்தேன் 
இந்த மண்ணுலகிற்கு விண்ணுலகை ஓர்நாள் 
விருந்துக்கு அழைத்துவர ஆசைகொண்டேன். 

...கவியாழினி...

Thursday 2 January 2014

மறுசுழற்சி



நம் மனம் 
ஓர் தண்ணீர் 

சுமைகள் 
பாரங்களாக 
மாறிட 
பனிகட்டியாகிறது 

சுமைகளெல்லாம் 
மறைந்து 
கண்ணீராக 
வெளியேற 

ஆவியாகி 
மறைந்து 
போகிறது 

மறுசுழற்சியானது 
நீர் மட்டுமல்ல 
நம் மனதின் 
எண்ணங்களும் 

...கவியாழினிசரண்யா...

Wednesday 1 January 2014

இந்த வாழ்வில் இந்த நாள்



நறுமுகை மலர்களின் நந்தவனத்தில் 
நான் கண்டெடுத்த ஒருவகை மலராய் 
இந்த வாழ்வில் இந்த நாள் 
...கவியாழினி...