Thursday, 17 October 2013

வியர்வை வாசம்

சோம்பல் முறித்து எழும் 
இனிய காலைவேலை - என் 
அருகமர்ந்து தலைகோதி தேனீர் 
அன்பாய் தருகையில் 
உழைப்பின் வெளிப்பாடாய் - வரும் 
அவள் வியர்வை வாசம் 

கல்சுமந்து மண்சுமந்து 
கால்கடுக்க வேலையென்றாலும்- என் 
வயிற்றின் பசிநேரத்தில் 
விரைந்து வந்து பாசத்தோடு 
அள்ளியெடுத்து ஊட்டுகையில் - வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அவள் கல்லுடைத்து கஷ்டப்பட்டு 
செய்திட்ட பணிகள்ஆயிரம் - நான்  
கல்லூரிக்கு சென்றுவர ;வயதுவந்த 
பிள்ளை எனக்கும் தலை வாரி 
அழகுப்படுத்தி அனுப்புகையில்-வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அலுவலகம் நான்சென்று வர 
பக்குவமாய் சமையல் செய்து -  என் 
வருகை பார்த்து காத்திருந்து    
பாசத்தோடு  முந்தானையால்
என் முகம் துடைக்கையில்  - வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அவள் கல்லறையில் ஆயிரமாயிரம்  
மலர்கள் மன்ம்பரப்பியும்  -என்
மனம் மண்டியிட்டு கதறுகையில் 
உணர்கிறது என் நலம்விரும்பி 
என்னுடன் இருக்கும் உன்னதமான -என் 
தாயவளின்  வியர்வை வாசத்தை   

கோடிக்கும் மேலான சொத்துக்கள்  
ஆயிரமாயிரம் பணியாட்கள் -என்  
மனைவி வாசனை உணர்ந்தும்  
மழலை வாசனை அறிந்தும் 
என்மனம் ஏங்கி தவிக்கிறது -என் 
தாயவளின் வியர்வை வாசத்திற்கு .
 
 ...கவியாழினி...

No comments:

Post a Comment