Thursday, 3 October 2013

கருப்பு உலகில் வெள்ளை முத்து


கலகலப்பு வாழ்க்கையில் 
கற்கண்டாய் கன்னிப்பருவம் 
கண்ணை மறந்து காதல் பிறந்தது 
காமுகனாய் நின்ற காதலனுடன் 

கற்புக்கு இடம்வைத்து காத்தேன் 
கயவனின் பார்வையில் கரைந்துபோனேன் 
கட்டிலுக்கும் போர்வைக்கும் இரையானேன் 
கள்வனிடம் காரியம் முடிந்தவளானேன் 

கணநிமிடத்தில் இழந்துபோனேன் 
கற்பை மட்டுமல்ல வாழ்வையும் 
கருவாக உருவான உன்னை 
கருக்கலைப்புக்கு ஆட்படுத்தவில்லை 

கள்ளமற்ற உனக்கு கள்ளிப்பாலூட்ட 
கல்மனம் கொஞ்சமும் எனக்கில்லை 
கல்லோடு குப்பையில்வீச மனமில்லை 
கயவர்களின் கேலிப்பேச்சு கழுத்தில் தாலிஇல்லை 

கன்னியிவள் கற்பிழந்தும் கண்மணிக்காக 
கண்ணீர்மல்க பாழ்பட்டபோதும் பால்சுரந்தேன் 
கண்ணே உதிரத்தை பாலாக கொடுக்கவில்லை 
கல்லாகிபோனவள் உணர்வை பாலாக ஊட்டினேன்

கல்லுடைத்து ரத்தம் சிந்தினாலும் 
கனியே ரௌத்திரமுடன் ஆளாக்கினேன் 
காற்றாய் சுற்றி புறப்படு 
கலங்காமல் உலகில் நடைபோடு 

கற்கண்டாய் நீ இருந்தாலும் 
கயவனென்றால் சீறி எழு 
கஞ்சி குடித்து வளர்ந்தாலும் 
கலக்கமில்லாமல் கற்பை காத்திடு 

காமுகனாய் வந்தால் கண்ணாலே எரித்திடு 
கரம் தீண்ட நினைத்தால் அனலாக கொதித்திடு 
கலங்கம் செய்ய நெருங்கினால் பாதாளம் காட்டிடு 
கண்ணியம்மா உன் தாயின் நிலையிலே 

கண்முழிக்க முடியாமல் வாழ்வை முடித்த 
கண்மணிகள் காணாமல் பலரிங்கு 
கருவிலே சிதைந்துபோன சிசுவும் பலவுண்டு 
கம்பீரமாய் நீயும் சாதிப்பாய் நாளையென 

காற்றும் தூசும் பாராமல் கண்ணாக 
கவலை மறைத்து வளர்க்கிறேன் 
கண்முன்னே உனக்கு வாழ்வின் 
கதை சொல்லி கருத்தை அள்ளி 
காண்போர்க்கு என் வாழ்வில் - நீ 
கருப்பு உலகில் வெள்ளை முத்தாக!!! 

...கவியாழினி ...

2 comments:

  1. Replies
    1. ரசித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி கவி ...

      Delete