Monday, 4 November 2013

ஆணவனின் தாய்மை


பிரசவ அறைக்கு தன் 
மனைவியை அனுப்பி 
வெளிநின்று தவித்து -தன் 
இதயமென்னும் கருவறையில் 
மனைவி பிள்ளையென 
இருவரை சுமந்திருக்க 
வலியில் துடிக்கும் இதயம் 


தன் குழந்தையின் 

அழுகுரல் கேட்டிட 
மனைவியின் கண் 
விழிப்பை கண்டிட 
வரும் பெருமூச்சில் 
முடிவு பெறும் 
ஆணவனின் பிரசவம் 


தன் பிஞ்சுக் குழந்தையினை 

நெஞ்சில் படுக்க தட்டிக்கொடுத்து 
கண்ணுறங்கும் தன் குழந்தையின் 
தூக்கம் கலையாது கீழிறக்கிட அவன் 
சுண்டு விரலை பிஞ்சு கைவிரல்கள் 
அஞ்சும் இறுக்கி பிடித்திருக்க 
மெல்ல அசையாது எடுத்து விட 


தூக்கத்திலும் விருட்டென மீண்டும் 

கெட்டியாக பிடித்திடும் அந்த 
மழலையிடம் தோற்றுப்போய் 
ஒருகணம் தூங்கும் அழகை 
ரசித்து உச்சு முகர்ந்து 
நெற்றியில் இடும் முத்தத்தில் 
இருக்கிறது ஆணவனின் தாய்மை 


கைகுழந்தையோடும் , கர்ப்பிணியும் 

பேருந்தில் நின்றிருக்க அமர்ந்த 
தன் இருக்கை தந்து எழுந்து நிற்கையில் 
பெண்ணவள் நன்றிசொல்லி அமர்ந்து 
அவள் நிம்மதி பெருமூச்சிடும் 
அத்தருணம் மகிழ்வதிளுள்ளது 
ஆணவனின் தாய்மை 


பள்ளிக்கு சென்ற தன் பிஞ்சுக்குழந்தை 

நேரமாகியும் கானது தவிக்கும் 
மனைவியிடம் ஆறுதல் உரைத்து 
உள்ளுக்குள் பதற்றம் கொண்டு 
தேடுகையில் பள்ளி வளாகத்தில் 
நின்று அப்பாவென சொல்லி 


சிரிக்கும் குழந்தையை கண்டவுடன் 

வாரி எடுத்து அள்ளி கொடுக்கும் 
முத்தத்தின் உணர்வில் இருக்கிறது 
ஆணவனின்தாய்மை 


மணவரத்தில் தன் மகள் அமர 

மாங்கல்ய வைபோகம் நிகழ்ந்திட 
அட்சதை தூவி ஆசிவழங்கும் 
தருண உணர்வினிலே மகளவளும் 
கால்தொட்டு கண்ணீர் மழை 
பொழிகையிலே மனதை வருடும் 
ஆணவனின்தாய்மை . 


தள்ளாடி நடைபோடும் வயதான 

தருணத்தினில் நடக்க முடியா 
நடை நடந்து சிறிதமர்ந்து 
மூச்சு வாங்கும் மனைவியை 
தன் மார்பில் சாய சொல்லி 
பல்லில்லா வாய் உதிர்க்கும் 
புன்முறுவலில் இருக்கிறது 
ஆணவனின்தாய்மை. 

...கவியாழினி ...


No comments:

Post a Comment