பட்ட படிப்பு படித்து பணிசெய்து
வீடுகட்டி பாவையிவள்
கவலையின்றி வாழுகிறாளென
பேசிடும் ஊரார்க்கு தெரியுமோ
படாதபாடு பட்டு படிப்படியாய்
படிப்போடு பணிசெய்து பண்போடு
அவள் வாழும் வாழ்வு
உறவாளன் வந்திருந்தும் சிரித்து
பேச கூட பிடிக்கலையோ சிறுக்கிக்கு
தனியாகவே வாழ்வை சமாளிக்கும்
அசட்டு தைரியோமோவென பேசும்
உறவினருக்கு தெரியுமோ
காசில்லாத காலத்திலே தூசியென
தூரம் தூக்கிப்போட்ட உறவுகளின்று
செல்வம் இருக்கையிலே தேடிவர
போலி புன்னகையாவது
செய்யென்று மனம் சொல்லியும்
மறுத்து நிற்கும் உதடுகளை
எப்போதும் சிரித்து மகிழ்ந்து
சுற்றிவருகிறாள் கவலைகள்
தெரியாதவளாய் கொடுத்துவைத்த
வாழ்க்கை வாழ்பவளென பேசிடும்
சக பணியாளர்களுக்கு தெரியுமோ
மனதுக்குள் துயரங்கள் கடலாய்
கொண்டு எழும்பும் அலைகளின்
ஓசையை வெளியில் காட்டாது
பிறரை சிரிக்க வைத்து மனதில்
அழுதுகொண்டிருக்கும் அவளின் நிலை
எப்போதும் எதையாவது செய்துகொண்டு
உன் போக்கிலே இருக்கிறாயா
வீட்டின் கஷ்டம் துளியேனும்
நினைவிருக்காவென அதட்டும்
அம்மாவிற்கு தெரியுமோ
தன் கவலைகளை மனதில்
புதைத்து துயரங்களை வீட்டிற்குள்
வராது தூரம் வைத்து நித்தம்
தன்னுள்ளே அழுதும் சிரித்தும்
சிந்தித்தும் செயல்பட்டு
குடும்பத்தை செம்மைபடுத்தும்
அவளின் உள்ளத்தை
வெளி உலகில் மகிழ்வோடும்
புன்னகையோடும் பூத்துக்குலுங்கும்
இவளின் மனம் படும்பாடும்
எழும் துயரங்களையும்
அனுபவிக்கும் வலிகளையும்
பெற்ற அனுபவங்களையும்
செவி கொடுத்து கேட்டால்
கற்சிலையும் கண்ணீர் வடிக்கும்.
...கவியாழினி ...
No comments:
Post a Comment