Tuesday, 5 November 2013

படிக்கிறேன் நானும் துடிக்கிறேன்


பள்ளிக்கூடம்  போயி நானும் 
பாங்காத்தான் படிக்கிறேன் 
அதுக்காக பலபாடு பட்டுக்குறன்

அஆஇஈ அழகா சொல்லிதந்த 
தாய்மொழின்னு என்பாட்டி  தவறியும்
நா பேசிபுட்டா  கட்டிடனும் அபராதம் 

பறந்து விரிந்த உலகத்துல முழு 
உலகத்தையும் புத்தகத்துல  படிக்குறன்    
மனசு வெறுத்து உள்ளுக்குள்ள தவிக்குரன்

விரும்பாத தலைப்ப கொடுத்து
நான் விரும்பும் தலைப்புன்னு 
மனப்பாடம்   பண்ணி எழுத்துறன் 
மனசுக்குள்ள நித்தம் குமுறுரன்

நம்ம ஊரு ஆத்துல பொதி சுமக்கும் 
கழுதையா நானும் புத்தக மூட்ட சுமக்குறன்
புரிந்து படிக்க முடியாம புழுவா நாதுடிக்கிறன்

ஒழுக்கம் கற்று கொடுக்குரனு 
அடுத்து இருக்கும் நண்பனுட்ட 
பேச கூட  தடுக்குறாங்க எங்கள 
கைதி போல அடைக்குறாங்க

ஆறு வயசு முடியல 
அறுபது பக்கம் படிக்கிறன் 
ஆறு மணிக்கு முழிக்கிறன்
ஆதி அந்தம் எழுதுறன் 
அதனால முதலிடம் பிடிக்கிறன்

ஆசிரியரின் பெயர் ஓங்க படிக்கிறன் 
தந்தை தாய் மனம் மகிழ நடிக்கிறன்
மனம் பகிர முடியாம தவிக்கிறன்

புரிந்து படிக்கவில்லை 
பயந்து நானும் நடிக்கிறன் 
மனமுணர்ந்து  படிக்க வேண்டியதை 
மனப்பாடமாக படிக்கிறன்  

உணர்ந்து படித்து உள்கொண்டு 
கருவாக உருவம் தரும் தேர்வினிலே 
பொட்ட மனப்பாடம் செய்து 
கக்கி வைக்கிறேன் காகிதத்தில் 

ஒருவனை முதலிடமாக்க அனைவரும் 
ஆக்கப்படுகிறார்கள் இங்கே முட்டாளாக 

எங்கள் சிறகுகளை ஒடித்து நடக்கிறது 
இங்கு சிறப்பு வகுப்புக்கள் 

பாவம் கடிகாரமுள் நகர நடக்கிறது 
இங்கே பயிற்சி வகுப்புக்கள் 

ஐந்து வயது சிறுவன் நானும் 
ஆறு நாளும் கல்வி கற்க்குறன் 
பெற்றோருக்கு பயந்து ஆசிரியரும் 
ஆசிரியர் கேள்விக்கு பயந்து பெற்றோரும் 
மாற்றி மாற்றி உருட்டிவிட 
பகடையாக உருளுரன் 

உலகம் சொல்லி தரும் கல்வி -என்று 
உள்ளதை சொல்லி தருமோ 
முதலிடம் பிடிக்கச்  சொல்லும் கல்வி -என்று 
முயற்சிசெய்ய திறமை வளர்க்ச் சொல்லுமோ 

வரலாறை மனனம் செய்ய 
சொல்லும் கல்வி- என்று 
வாழ்கையை உணர வைக்குமோ 

படி படியென சொல்லாமல் வாழ்வின் 
பிடிப்பை என்று சொல்லிடுமோ 
என்போன்ற பிஞ்சுகள் மனம்   
நஞ்சாவதை என்று அறிந்திடுமோ 

கலை முதல் மாலை வரை
புத்தகம் பார்த்தே படித்திட்டால்  
நானும் சீக்கிரம் பைத்தியம்தானென்று 
இந்த உறவும் உலகமும் என்று உணர்ந்திடுமோ   

சிறகை கட்டிபோட்டு பறக்கச்  
சொல்கிறது சிந்தை கெட்ட உலகமிங்கு 
பறக்க ஆசைகொண்டு சிறகை ஒடித்து 
உயிரும் ஊசலாடி போனோர் பலருண்டு   

உணர்வை புரிந்து உன்னதமான வாழ்விற்கு 
உயரிய வழி காட்டும் கல்வி என்று வந்திடுமோ 
என்போன்ற பிஞ்சுக்கள் மனம் வெம்பாமல்
மகிழ்ச்சியில் கல்வி கற்கச் செய்திடுமோ ?

 ...கவியாழினி...

No comments:

Post a Comment