Sunday 14 September 2014

இந்த மனம்


அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
 காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது 

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக 
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் 
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை 
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் 

போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை 
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு 
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை  இந்த மனம் 

சருகுகளின் பாதியிலே வாழ்கை 
பயணித்தாலும் பசுமை புற்களின் 
பச்சை வாசம் மறக்கவில்லை  இந்த மனம் 

அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
 சிரிக்கும் நேரம் வருகையில்  சிரிப்பை 
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம் 

வலியோடு வாழ்க்கை வரமறுத்து 
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் 
அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை 
தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் 

மணி நேரமெல்லாம் மரண வழியாக 
தோன்றினாலும் ஒரு நிமிடம் மலரின் 
முக மலர்சியாய் சிரித்து மகிழும் இந்த மனம்  

தன்னம்பிக்கையோடு தைரியமாய் 
விடாமுயற்சியோடு தன் பாதை  நோக்கி 
பயணத்தை தொடரும் இந்த மனம் 
சில நேரம் என்னையே  பெருமை பட வைக்கிறது.

....கவியாழினிசரண்யா... 

Sunday 24 August 2014

நெருப்புக் கூண்டு

பறந்து விரிந்த உலகுதன்னில் - சிறகடித்த 
பறவையிவள் எண்ணங்களை எடுத்து 
எரிதீயில் போட்டு பொசுக்குகின்றனர்- சமுதாய 
எதிர்ப்பார்ப்பென்று என்னை ஏமாற்றி 

அறிவு சுரங்கத்தில் அருளிய - பொருளென்று 
அறத்தோடு வளர்த்து அழகுநடைபோட 
புகழ் முன்னேற்றம் பெண்ணிற்கு - வேண்டாமென 
புழுகலேற்றம் மனதில் நிரப்புகிறார்கள் 

பருவ வயதினிலே முடித்திடனும் -திருமணம் 
பக்குவமாயென்று பனிக்கட்டியாய் உருக்கி 
மயக்குகின்றனர்; பள்ளி வயதிலே -பதியம்போட்டு 
மனதில் பசுமரத்தாணியான என்லட்சியத்தை 

உண்மைகளை எடுத்துக் சொன்னால் - ஊரார்க்கு 
உணராத வாயாடியென்று பெயர் 
தற்காப்புக் கலை கற்று - நடைபோட்டால் 
தகாத அடங்காப்பிடாரி இவள் 

சுதந்திரமென சுற்றித்திரிந்து சுடும் -பாதைச்செல்ல 
சுரத்தை இல்லாத பெண்ணல்ல 
அடைப்பட்ட கூண்டில் சுதந்திரமுடன் - வாழ 
அடிமை பெண்ணும் நானல்ல 

சுதந்திர நாட்டினில் சுதந்திரமுடன் - என் 
கூண்டின் சுற்றுத்தளம் என்சுதந்திரம் 
நெகுகிறது என்மனம் ; திறமைகள்  பொசுங்க 
நெருப்பிலிட்ட என்மனம் வேகுகிறது 

(சமூகமென்னும் நெருப்புக் கூண்டுக்குள் அடைப்பட்டு நானிங்கு ,என முன்னேற துடிக்கும் ஒரு பெண்ணின் குமுறல்கள் ) 
...கவியாழினி...

Saturday 23 August 2014

கடிதங்கள்


கட்டுக்கடங்கா பாசத்தையும் 
கணிக்க இயலா நேசத்தையும் 
சொல்லி முடிக்க முடியாமல் 
சொல்லாமலே அறியவைக்கும் 

எண்ணிலடங்கா எண்ணங்களின் 
வெளிப்பாடாய் எத்தனையோ 
உறவுகளின் குவியலாய் 
தொன்று தொட்டு தொடர்ந்து வந்த 

தொய்வில்லா நன்றிமறவா பண்பாடது 
ஓர் ஊரனைத்தும் விசாரித்து முடியாமல் 
ஓர் ஓரத்திலும் நுணுக்கி எழுதிவிசாரிக்கும் 
வரும் நாளை எதிர்ப்பார்த்து 

வந்து வந்து எட்டிப்பார்க்கும் சுகம் 
வந்துசேர்வதை எண்ணி 
வயது பெண் முதல் 
வயதான மூதாட்டி வரை 
காத்திருந்து கையில் பெரும் சுகம் 

முன் தெரு மல்லிகா அக்கா முதல் 
முள்ளுக்காட்டு முனுசாமி அண்ணன் 
வரை நலம் விசாரித்து 

பண்பாய் வீட்டு பசு கன்றையும் 
பக்கத்து வீட்டு கந்தசாமி 
தாத்தாவின் கைத்தடி வரை 

தன் கண்மூடாமல் கணக்கிட்டு விசாரித்து 
தன் கையில் வைத்திருக்கும் 
பேனாவின் மை தீரும் வரை 

தீட்டி முடித்து பின்பும் அதை 
விட்டுட்டனே என்று புலம்பி தீட்டும் 
ஓரத்தில் நுணுக்கி விசாரிக்கும் அன்பு 

காவல் தெய்வமாய் கண்ணுக்கு தெரியும் 
காவி உடை அணிந்த தபால்காரர் 

என் பையன் எழுதிருக்கான் படித்து சொல்லடி 
என் தங்கம் என்று பேத்தியை கொஞ்சும் பாட்டி 
கணவனின் விசாரிப்பை படித்து கண்ணீரில் 
கண் நேரில் பார்த்த மகிழ்சியில் 
காகிதத்தை கட்டியணைக்கும் மனைவி 

இது அனைத்திலும் நிரம்பி வழியும் 
ஒன்றேஒன்று இந்த கள்ளமில்லா 
உள்ளங்களின் கணிக்க முடியா அன்பு 

அந்த காலத்தில் எழுதிய 
கடிதங்களை பிரதி எடுத்தால் 
அவை இக்கால நீண்ட முழு தாளின் 
நான்கு பக்கம் நிறையும் 

அத்துணையும் அழகான அன்பின் ஏக்கங்கள் 
ஆசையாய் எடுத்து படித்தேன் அந்தக்காலத்தில் 
ஆறுதலாய் வந்து போன கடிதாசி 
என்ற கடிதங்களை ஏக்கத்தோடு ... 

...கவியாழினிசரண்யா..