Monday 11 November 2013

கேள்விகேள்! கேள்விகேள்!



சிரிப்பும் கோவமும் அழுகையும் 
ஆத்திரமும் உள்ளிருந்து வெளிவர 
சாந்தமுடன் முகம் கொண்டு 
சாந்தமற்ற மனம் கொண்டு 

ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஆர்ப்பரித்து 
அமைதியாக காட்சியளிக்கும் மனத்துள் 
அடக்கமுடியா கேள்விகள் அடிக்கடி 
மேலெழும்பி வந்து சென்றிடும் 

உலகம் உருவானதெப்படி? -அதை 
பார்க்காமல் அறியாமல் அறிவியலென்பதெப்படி? 
உயிர்கள் பிறப்பு உருவானதெப்படி ? 
இறப்பின் பின் நிகழ்வதை அறிவதெப்படி ? 

மரங்களழித்து மனிதன் வாழ்வதெப்படி ? 
மாசு நிறைந்த உலகம் மாறினால் 
நாளை நோய்கள் குறைவதெப்படி? 
தெரிந்தும் நாம் மாசாக்குவதெப்படி? 

எப்படி? எதற்கு? ஏன்? எதனால்? 
எதற்காக? எவ்வாறு ? எங்கு ? 

கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளை 
காண்போரிடமும் கண்ட இடத்திலும் 
வாரி இறைக்காதே வம்பிழுக்காதே 
வழக்கை வாங்கி கட்டிக்கொள்ளாதே 

தேவை ஏற்படும் இடத்தில் 
தெறிக்கட்டும் உன் கேள்விகள் 
பதில் தேடும் வேளையில் 
உதிக்கட்டும் உன் கேள்விகள் 

கேள்விக்கேள் கேள்விக்கேள் 
சிந்தித்து கேள்விகளை கேட்பவர்கள் 
இவ்வுலகில் அறிவாளி 
கேள்விகளுக்கு சரியான பதிலை 
தேடுபவர்கள் புத்திசாலி 

நீ கேள்விகேட்டு கேள்விகேட்டு 
பதில்தேடு ;தேடி தேடி 
தெரிந்துக்கொள் தெளிவுகொள் 

புத்தியுள்ள அறிவாளியாய் மாறிடு 
அறிவுள்ள புத்திசாலியாய் உருவெடு 

கேள்விகள் தொடரட்டும் 
தொடந்து கொண்டே இருக்கட்டும் 
பதில்கள் கிடைக்கட்டும் 
கிடைத்துக்கொண்டே இருக்கட்டும் 

உன் மனதுள் கேள்விக்குறிகள் 
பலவும் பிறக்கட்டும் பிறந்துகொண்டே 
இருக்கட்டும் பதிலும் கிட்டட்டும். 
கேள்விகேள்! கேள்விகேள்! 

...கவியாழினி...

No comments:

Post a Comment