Monday 28 October 2013

பெண்ணிவளின் சேலை!!!

பால்வண்ண 
பருத்தியில் நூலெடுத்து 
வானமென்னும் 
 தறிகொண்டு 
வானவில்லின் 
வண்ணமெடுத்து 
நிலாவில் சாயம் ஏற்றி 
தேவர்களும் தெளிவாக 
நெய்தெடுத்தது 
பெண்ணிவளின் சேலை!!! 

...கவியாழினி...

Saturday 26 October 2013

சந்திப்போமடா!!! சந்திப்போமடி!!!


என் இதயம் சொல்ல துடிக்குது 
என் இதயம் கேட்க்க தவிக்குது 
நம் அன்பை பகிர்ந்து கொள்ள 
அருகே அருகே அமர்ந்து கொஞ்ச 


பார்த்த நாட்களின் மகிழ்ச்சியை 

பாராத நாட்களின் வெறுப்பினை 
பேச நினைத்த தருண உணர்வினை 
பேசாமல் போன நாட்களின் தவிப்பினை 


இருவரும் பகிர்ந்திட பேசி ரசித்திட 

சந்திப்போமடா!!! சந்திப்போமடி !!! 

Wednesday 23 October 2013

அந்த ஊர்


செக்கச்சிவந்த வானம் , 
கொக்கரக்கோவென கூவும் சேவல் , 
பசுமை எழில் கொஞ்சும் 
கண்களில் படுமிடமெல்லாம் ; 

சிட்டுக்குருவிகளும் ,குயிலும் 
மாறிமாறி கானம்பாடி இன்புறுத்த , 
மனதில் மகிழ்ச்சிபடர மலர்கள் மலரும் 
அதைகண்டு காதல்கொண்டு 
வண்டுகள் ரீங்காரமிடும் , 

வாலை ஆட்டிக்கொண்டு 
ஆசையோடு ஓடிவந்து நிற்க 
பார்ப்போர் நின்ற இடத்தில் 
பசியறிந்து அன்போடு உணவிட 

உண்டுவிட்டு இரவு முழுதும் 
விழித்திருந்து ஊர்காக்கும் நாய்கள் 
அங்கும் இங்கும் ஓடி விளையாட , 

கட்டிளங்ககாளையர்களின் 
வீரவிளையாட்டும், குட்டி குட்டி 
வாண்டுகளும் உடன் கூட்டமாக 
விளையாடும் தெருக்களோடு , 

தன் களைப்பு தெரியாமலிருக்க 
பாடல் பாடிக்கொண்டே 
களைபரித்தும் நாற்று நட்டும் 
செழித்து இருக்கும் 
கிராமம் அல்ல அது , 

))))))((((((!*!*!*!*!*!*!*!*!*!*))))))(((((( 

எங்கு நோக்கினும் 
வாகனங்கள் அலைமோத 
செவிகளில் எப்போதும் 
ஓயாது இரைச்சல் ஒலிக்க , 

இரவும் பகல்போல் மக்கள் கூட்டம் 
அலைமோதிக்கொண்டே இருக்கும் , 
ஆடவரும் பெண்டீரும் பார்ப்பதற்கு 
ஒன்றாகவே காட்சியளிக்கும் 

கால்வைக்கும் இடமெங்கும் 
சலவைக்கல்லும் கருங்கல்லுமாய் 
வழவழப்பாய் காட்சியளிக்கும் 
மண்துகள்கள் பார்ப்பதே அரிதாகும் , 

பத்தும் பனிரெண்டுமாய் உயர்ந்தே 
காட்சியளிக்கும் கட்டிடங்கள் , 
மாடியிலும் பால்கனியிலும் 
இருந்தாலிருக்கும் சிற்சிறு 

பச்சை நிற செடி கொடிகள் 
என காட்சியளிக்கும் 
நகரமுமாய் இல்லாது 

))))))((((((!*!*!*!*!*!*!*!*!*!*))))))(((((( 

சிறிது பச்சை பசேலென்று 
ஒருபுறம்; ரியல் எஸ்டேட்டிற்காக 
பசுமையை கூறுப்போட்டு 
விற்கும் நோக்கில் நடப்பட்ட 
கற்கள் கொண்டு மறுபுறம் 

நிமிடம் தவறாமல் ஓடும் 
போக்குவரத்தாய் இல்லாது 
ஏதோ இல்லையென்று சொல்லாமல் 
இருக்கிறதென தெரியஓடும் வாகனங்கள் 

வளர்ச்சியென்று முக்கிய பகுதிகளில் 
தார் சாலையும் செம்மண்ணோடு 
உள் சாலைக்களுமாய் காட்சித்தர 

சிட்டுக்குருவிகளையும் , 
தும்பிகளையும் தொலைத்தாலும் 
இருக்கிறது பறவைகளென 
சில பறவைகள் பறந்துவரும் , 

தேய்ந்த கிராமமாகவும் , 
வளர்ந்து(மாறி)வரும் நகரமாகவும் 
காட்சியளித்தது அந்த ஊர். 

...கவியாழினி...



Sunday 20 October 2013

கண் அன்பு நீ

வேறுபட்ட வகையான  பணி
வெவ்வேறு கலாச்சார குடும்பம்
வேற்றுமையான பழக்கவழக்கங்கள்
ஒன்றாக சங்கமித்தது இருமனங்கள்

பேசிய பல  மொழிகளில்
ஒற்றுமையானது இருவருக்கும்
தமிழும் ஆங்கிலமும் 

அதிகம் வார்த்தைகள் பரிமாறவில்லை
பார்வைகள் பலவற்றை பரிமாறின

ஆசையின் அர்த்தங்களை அவர்களின்
முகத்தின் மாற்றங்கள் காட்டிக்கொடுத்தன

அவள் வரவு காணாமல் அனிச்சம்மலராய்
அவன் முகம் வாடும்
அவனின் அன்புப்பார்வையில்  அவள்
நாணிக் கண்புதைப்பாள்

இவளின் மனம் புரிந்து அவன் செயல்படுவான்
அவன் குணம் அறிந்து இவள் செய்திடுவாள்

அவள் கைப்பட்டதால் பிடிக்காததும்
பிடித்தது இவனுக்கு
இவனுக்கு பிடிக்காததால் பிடித்ததும்
வெறுத்தது அவளுக்கு

கோவங்கள் வருகையில் யாரேனும்
விட்டுக்கொடுத்தால் நல்லதென நினைக்க
இருவரும் விட்டுக்கொடுப்பார்கள்
விட்டுக்கொடுக்க முடியா அன்பிற்காக

முதன்முதலாய் மனம்திறக்க
தன் காதலை வெளிப்படுத்த
நேருக்கு நேர் நின்று மனதின்
வெளிப்பாடை தங்களின் இதழ்
திறந்து சொல்லிக்கொண்டனர்
===கண் அன்பு நீ ===

---கண்------ eye ----------- I
--அன்பு ----காதல் ----LOVE
-----நீ--------YOU--------------U

...கவியாழினி...



Friday 18 October 2013

கொலையா? தற்கொலையா?

வந்து பிறந்த நாள்முதல் 
வளர்ந்த நாட்களெல்லாம் 
வறுமையில் கழிகிறது 
வலியோடு வாழ்வின்வழி
வழுக்கிப் போகவே 
வாழவேண்டாமென 
வாழ்வை  முடிக்க வந்தாயோ தற்கொலைக்கு ?

உயிரின் உயிராகி 
உணர்வில் உள்புகுந்து 
உன்னுள் நுழைந்தவள் 
உன்னவள் இல்லையென 
உதறித்தள்ளி உதாசித்து 
உன்னைவிட்டு போனாளென 
உயிரைவிட வந்தாயோ தற்கொலைக்கு ?

தாய் விட்டுப்போனாள் அனாதையாய் 
தந்தை ஓடிப்போனான் யாரோடோ  
தரணியில் வாழும் மக்களின் 
தரங்கெட்ட வார்த்தைகள் 
தங்கமான உன் எண்ணங்களை 
தகரமாக எடைபோட வேண்டாமென 
தாய்சென்ற இடந்தேடி வந்தாயோ தற்கொலைக்கு?

பள்ளியிலே முதலிடம் 
பரிசுகளும் பலப்பெற்று 
பட்டமெல்லாமும் பதக்கத்தோடு
படித்து பட்டதாரியாய்
படிப்புக்கள் உன்பெயரை அலங்கரிக்க 
பசிப்போக்க முடியா நிலையில் 
பழிதீர்க்க வந்தாயோ தற்கொலைக்கு ?

தொட்டதெல்லாம் தோல்வியாகிறது 
தொலைந்துப்போனது என் வாழ்வாகியது 
தொடரும் விரக்தியும் வேதனையும் 
தொல்லைகளாய் குவிந்த வண்ணம் 
தொடர்ந்து வாழவிடாமல் விரட்டிட 
தொங்கிவிடலாமென துணிந்து வந்தாயோ ?

சிறுநிமிடம் சிந்திப்பயோ 
சிறப்பான உன் சிந்தைக்கொண்டு
சிறிது நேரத்தில் போகும் உன்உயிரால்
சிரமமென்று நீ நினைத்தவை மாறிடுமா?
சீ கோழை என்று உன்னை  ஏசிடுமா?
சிறப்பான அழகிய வாழ்வினை 
சிதைத்து சிரமத்திற்கு ஆளாகாதே 

வாழ்வதற்கு ஆசைக்கொண்டு 
வாழ்வை வரவேற்றிடு 
வழிகள் உதித்திடும் பலவென்று  
வலியோடு இருந்தாலும் 
வாழ்வில் நல்வழியை தேர்ந்தெடு 
வாழ்வின் வசந்தங்களை ரசித்திடு 
வரலாற்றில் உன் பெயரை பதித்திடு 

இனி உன் முடிவு உன் கையில் 
இனி   தற்கொலை செய்வாயோ 
இல்லை தற்கொலை எண்ணத்தை 
இல்லாது கொலை செய்வாயோ
இடித்துக்கூறு இக்கணமே 
இனி கொலையா? தற்கொலையா?    

 ...கவியாழினி...

Thursday 17 October 2013

வியர்வை வாசம்

சோம்பல் முறித்து எழும் 
இனிய காலைவேலை - என் 
அருகமர்ந்து தலைகோதி தேனீர் 
அன்பாய் தருகையில் 
உழைப்பின் வெளிப்பாடாய் - வரும் 
அவள் வியர்வை வாசம் 

கல்சுமந்து மண்சுமந்து 
கால்கடுக்க வேலையென்றாலும்- என் 
வயிற்றின் பசிநேரத்தில் 
விரைந்து வந்து பாசத்தோடு 
அள்ளியெடுத்து ஊட்டுகையில் - வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அவள் கல்லுடைத்து கஷ்டப்பட்டு 
செய்திட்ட பணிகள்ஆயிரம் - நான்  
கல்லூரிக்கு சென்றுவர ;வயதுவந்த 
பிள்ளை எனக்கும் தலை வாரி 
அழகுப்படுத்தி அனுப்புகையில்-வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அலுவலகம் நான்சென்று வர 
பக்குவமாய் சமையல் செய்து -  என் 
வருகை பார்த்து காத்திருந்து    
பாசத்தோடு  முந்தானையால்
என் முகம் துடைக்கையில்  - வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அவள் கல்லறையில் ஆயிரமாயிரம்  
மலர்கள் மன்ம்பரப்பியும்  -என்
மனம் மண்டியிட்டு கதறுகையில் 
உணர்கிறது என் நலம்விரும்பி 
என்னுடன் இருக்கும் உன்னதமான -என் 
தாயவளின்  வியர்வை வாசத்தை   

கோடிக்கும் மேலான சொத்துக்கள்  
ஆயிரமாயிரம் பணியாட்கள் -என்  
மனைவி வாசனை உணர்ந்தும்  
மழலை வாசனை அறிந்தும் 
என்மனம் ஏங்கி தவிக்கிறது -என் 
தாயவளின் வியர்வை வாசத்திற்கு .
 
 ...கவியாழினி...

Monday 14 October 2013

மாலை

தன் நிலா 
காதலியின் 
வரவை
ஒளிந்திருந்து  
ரசிக்க  
தன் 
ஒளிக்கதிர்களை 
சுருக்கி 
மறைந்துக்கொண்டான்
சூரியன்
தோன்றியது 
இதமான 
வேலை அது 
=மாலை= 
...கவியாழினி...

Thursday 10 October 2013

தீர்த்தம்


தேவதை 
இவளின் 
காலில் 
பட்டுத்தெறித்த
நீர்த்துளிகளும் 
தீர்த்தமாகின.

...கவியாழினி...  

மண்வாசனை

-வான் மகன்- 
மேகமென்னும் 
தூதுவிட்டு 
மழையென்னும் 
வடிவில் 
கொடுத்திட்டான் 

Tuesday 8 October 2013

சருகுகளின் வாசனை

கருவறையில் வெளிவர 
கல்லறையாய் இருட்டுச்சமூகம் 
கண்ணை மறைக்கிறதா 
கட்டியெடுத்து அனைத்தாலும் 
கண்ணே அரவணைப்பென்று 
கனக்கிறதா அழும் மனம் 

உயிர் கொடுத்தவன் யாரென்றும் 
உன்னை ஈன்றவள் யாரென்றும் 
உன்னவர்களை உள்ளம் தேடுகிறதா 
உல்லாசத்தில் ஊஞ்சலாடி 
உறவின் அர்த்தம் உணராதவர்கள் 
உள்ளத்தின் ரணம் அறிவரோ 

பெற்றோரும் மற்றோரும் 
பெயர்சூட்டி கூட்டம் கூட 
பெற்றவர் பெயர் தெரியாமல் 
பெயரற்றவளென வாழ்க்கை 
பெரும் சோகமாகிறதா 

அள்ளியெடுத்து கொஞ்சி 
அனைத்து ஆசைமுத்தமிட்டு 
அன்போடு விளையாடுகையில் 
அனாதை என்ற பெயரோடு 
அடியெடுக்க தயங்குகிறதா மனம் 

நடைபயில ,நன்கு குளிப்பாட்ட 
நகையோடு அலங்கரிக்க -உண்ண 
நல்ல உணவூட்ட உறவுகள் சூழ ; 
நான் செய்கிறேன் என் பணியை 
நான்கு வயது எட்டுமுன்னேவென 
நரகமாக தோன்றுகிறதா 

தோன்றும் துயரங்களை 
தோண்டி குளியில் போடு 
தோதகமாய் விட்டுச்சென்ற 
தோலாட்டமானவர்களுக்கு நீ 
தோரணியாய் வாழ்ந்து காட்டிடு 

உயிரின் வலியை உரமாக்கி 
உறுதியோடு உலகில் வளர்ந்திடு 
உன்னதமாய் உயர்ந்து நடைபோடு 
உதாசித்தவர்கள் உன்முன் ஊனமாகட்டும் 
உன் ஒருத்தியின் வளர்ச்சி உன்போன்றோருக்கு 
உத்வேகமாய் மலர்ச்சி கொடுக்கட்டும் 

உன்னைப்போல் இனி ஒரு 
உயிர் பிரக்காமளிருக்க 
உரிமை குரல்கொடு 
உணர்வுகளை கட்டிபோட கற்கட்டும் 
உண்மையில் இவ்வுலகில் 
உள்ளம் குளிர மலரை ரசிக்கும் மனம் 

===உணர நினைப்பதில்லை 
உதிர்ந்த சருகளின் வாசனையை === 

(=====தோதகமாய் - வஞ்சகமாய் 
=====தொலாட்டம் - அற்பத்தனம் 
=====தோரணியாய் - வரலாறாய் )




















...கவியாழினி... 

Sunday 6 October 2013

காதலனை வழியனுப்பும் காதலி

நான் துடிக்கும் வேதனை 
அவனையும் வதைக்குமே 
எப்படி தேற்றப்போகிறான் 
பார்க்கும் இடங்களிலும் 
பாராத நினைவிலும் நான் 
நின்றுகொண்டே இருப்பேனே 

என்னவனிடம் குடியிருக்கும் 
என் நினைவுகளே 
எங்கோ போய் 
தற்கொலை 
செய்துகொள்ளுங்கள் 
அவன் புது நினைவுகளுடன் 
புதுவாழ்வை தொடரட்டும் 

ஆயிரம் மலர்களிலும் 
அந்திவான நிலவிலும் 
வீசும் தென்றலிலும் 
விடியற்காலை பொழுதிலும் 
என் நினைவுகள் பளிச்சிடுமே 

இவளின் நினைவுகள் 
அவனின் இதயம் விட்டு 
சென்றிட வேண்டுமே 
இனியவளின் நினைவுகள் 
அதில் புகுந்திடவே 
மகிழ்ச்சி அவன் 
மனமெங்கும் இனிதாய் 
நிறைந்திட வேண்டும் 

வலியோடு நீ மாலைசூட 
வாழ்க்கை வழிதெரியாமல் 
போகக்கூடும் நீ 
வலிபொருத்து 
விழிநீரால் இதயத்தின் 
நினைவை அகற்றிடு 
வருபவளின் கைபிடித்திடு 

உன் மனமென்னும் 
வீட்டில் மேடையமைத்து 
ஒட்டடை தட்டிடு 
உள்மனதில் அவளை 
புகுத்தி புதுவிழா எடுத்து 
புது வாழ்வில் நுழைந்திடு ...

...கவியாழினி...



மீட்டா இசை

மீட்டாமலே 
இசைப்பாடுகிறது  
வீணை 

உன் 
பொன்விரல்கள்
அதன்மேல் 
பட்டதால் ...
...கவியாழினி...


முதிர்கன்னி

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீனையிவள்
யாரும் மீட்டாமல் இன்றும் வாடுகிறாள்
=====முதிர்கன்னி ===== 

...கவியாழினி...

காத்திருக்கிறது

நீயும் நானும் 
ஒன்றாய் அமர்ந்து 
பேசிய சாய்வு 
நாற்காலியும் 

நாம் பாதம் பதித்து 
ஓடிவிளையாடிய 
கிளைபரப்பிய 
மரங்களும் 

நாம் பாதம்பதித்து 
இணைந்து 
வருவோமென 

தரையில் 
இலைகளை பரப்பி 
கையில் 
இரு ரோஜா 
மலர்கள் கொண்டு 

வரவேற்க 
நம்பிக்கையோடு 
காத்திருக்கிறது 
நம் வரவிற்காய்... 

...கவியாழினி...

Saturday 5 October 2013

வாழ்வோம் வாழ்வை !

ஒரே நாளில் பூத்துமடியும் பூக்கள் கூட 

மலரும் போதும் சிரிக்கின்றன ! 
மண்ணில் விழும்போதும் சிரிக்கின்றன ! 
செடியில் இருக்கும் போதும் சிரிக்கின்றன ! 
அனைவர் மனதிலும் நீங்காமல் வாழ்கின்றன ! 

ஆனால் 
மனிதர்கள் பிறக்கும் போதும் அழுகின்றோம் ! 
இறக்கும்போதும் மற்றவரை அழ வைக்கிறோம் 
இருக்கும் வரை அனைவரையும் மகிழ்விக்கலாமே! 

இறக்கத்தானே பிறந்தோம் ! 
இரக்கத்தோடு வாழ்வோம் !

...கவியாழினி...

தன்னம்பிக்கைத் துளிகள்

கண்ணீர் குளத்தில் 
மலர்ந்த வெண் தாமரை !!! 

கவலைகள் நிரம்பிய 
குளத்துள் மூழ்கிய போது 
உதவியாய் வந்த நீச்சல் !!! 

சுற்றி இருப்போர் 
உதாசிக்க ஊனமான 
எனக்கு ஊக்கம் தந்த உணர்வு!!! 

கண்தெரியாதவனாய் நான் 
நடைபயில எனக்காக 
துணைக்கு வந்த கைத்தடி !!! 

பெற்றோரும் மற்றோரும் 
அலட்சியம் செய்கையில் 
என் லட்சியம் காட்டிய கண்ணாடி!!! 

கரப்பான் தின்று 
கிடைத்த புத்தகத்தில் 
கண்டெடுத்தக் கரு!!! 

நிர்வாணமாய் நான் 
நின்றிருக்கையில் மானம் 
காக்க வந்த ஆடை!!! 

====தன்னம்பிக்கை ==== 

...கவியாழினி...

மழையோடு ஓர் கற்பனை உறவு

இதமான மழைச்சாரலுடன் 
இலகுவான நடை நடக்க 
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!! 

மோகம் கொண்டு வந்து 
தேகம் தீண்ட நினைத்து கல்லில் 
தெறித்த பின் தெளிந்தாயோ 
அனுமதியில்லாமல் - பெண்மை 
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!! 

உள்ளம் புரிந்து என் இதழ்களில் 
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க 
முத்தமிடுகிறாயே எப்படி 
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல் 
உன்னுள்ளும் இருந்ததோ!!! 

நனைந்தபடி நான் செல்ல தலை 
துவட்டிய தாயின் அன்பில் 
உணர்ந்தேன் உன் தாய்மையை 
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால் 
என்னை தலை குளிக்கவைத்தாய்!!! 

நனைந்த புத்தகத்தை பாதுகாக்க 
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம் 
மிதமானது உன் வேகம் புரிந்தேன் 
தோழமை உணர்வுகொண்டு - என் 
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!! 

...கவியாழினி...



என் நினைவெல்லாம் நீ!


உன் கூந்தலின் வடிவங்களோ 
கார்முகில்கள் ! 
உன் குரலின் இனிமையோ 
அருவியின் ஓசை! 
உன் மனதின் பிரதிபலிப்போ 
கலங்கம் நீக்கிய நிலவு! 
உன் முகமலர்ச்சியின் அழகோ 
மலர்ந்த தருனதிலுள்ள மலர் ! 
உன் புன்னகையின் ரசனையோ 
ஒன்றுதிரட்டியநட்சத்திரங்கள்! 
உன் கற்பின் காவலோ 
சுட்டெரிக்கும் நெருப்பு ! 
இவையெல்லாம் நீயென வியந்தேன் ! 
என் நினைவெல்லாம் நீ என்பதுனர்ந்தேன் !
...கவியாழினி...

Thursday 3 October 2013

வெள்ளை காகிதம்


நாம் ஒவ்வெருவரும் 
இவ்வுலகிற்கு வெள்ளை 
காகிதமாய் வருகிறோம்! 

சிலர் கிறுக்கப்படுகின்றனர், 
சிலர் கிழித்து எறியப்படுகின்றனர் , 
சிலர் கசக்கி குப்பையில் வீசப்படுகின்றனர், 

ஆனால் சிலர் கவிதையாய் எழுதி 
பின் வாசிக்கப்படுகின்றனர் ! 
உனக்கென ஒரு வாழ்வை 
தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிடு ! 

வரலாற்றில் எழுதப்படுவாய் 
===கவிதையாக ! ===
இல்லையென்றால் கசக்கி எறியப்படுவாய் 
===காகிதமாக !===
    
 ...கவியாழினி...

கருப்பு உலகில் வெள்ளை முத்து


கலகலப்பு வாழ்க்கையில் 
கற்கண்டாய் கன்னிப்பருவம் 
கண்ணை மறந்து காதல் பிறந்தது 
காமுகனாய் நின்ற காதலனுடன் 

கற்புக்கு இடம்வைத்து காத்தேன் 
கயவனின் பார்வையில் கரைந்துபோனேன் 
கட்டிலுக்கும் போர்வைக்கும் இரையானேன் 
கள்வனிடம் காரியம் முடிந்தவளானேன் 

கணநிமிடத்தில் இழந்துபோனேன் 
கற்பை மட்டுமல்ல வாழ்வையும் 
கருவாக உருவான உன்னை 
கருக்கலைப்புக்கு ஆட்படுத்தவில்லை 

கள்ளமற்ற உனக்கு கள்ளிப்பாலூட்ட 
கல்மனம் கொஞ்சமும் எனக்கில்லை 
கல்லோடு குப்பையில்வீச மனமில்லை 
கயவர்களின் கேலிப்பேச்சு கழுத்தில் தாலிஇல்லை 

கன்னியிவள் கற்பிழந்தும் கண்மணிக்காக 
கண்ணீர்மல்க பாழ்பட்டபோதும் பால்சுரந்தேன் 
கண்ணே உதிரத்தை பாலாக கொடுக்கவில்லை 
கல்லாகிபோனவள் உணர்வை பாலாக ஊட்டினேன்

கல்லுடைத்து ரத்தம் சிந்தினாலும் 
கனியே ரௌத்திரமுடன் ஆளாக்கினேன் 
காற்றாய் சுற்றி புறப்படு 
கலங்காமல் உலகில் நடைபோடு 

கற்கண்டாய் நீ இருந்தாலும் 
கயவனென்றால் சீறி எழு 
கஞ்சி குடித்து வளர்ந்தாலும் 
கலக்கமில்லாமல் கற்பை காத்திடு 

காமுகனாய் வந்தால் கண்ணாலே எரித்திடு 
கரம் தீண்ட நினைத்தால் அனலாக கொதித்திடு 
கலங்கம் செய்ய நெருங்கினால் பாதாளம் காட்டிடு 
கண்ணியம்மா உன் தாயின் நிலையிலே 

கண்முழிக்க முடியாமல் வாழ்வை முடித்த 
கண்மணிகள் காணாமல் பலரிங்கு 
கருவிலே சிதைந்துபோன சிசுவும் பலவுண்டு 
கம்பீரமாய் நீயும் சாதிப்பாய் நாளையென 

காற்றும் தூசும் பாராமல் கண்ணாக 
கவலை மறைத்து வளர்க்கிறேன் 
கண்முன்னே உனக்கு வாழ்வின் 
கதை சொல்லி கருத்தை அள்ளி 
காண்போர்க்கு என் வாழ்வில் - நீ 
கருப்பு உலகில் வெள்ளை முத்தாக!!! 

...கவியாழினி ...

ஞாபகமறதி


ஞாபகமிருக்க 
வேண்டியவற்றை 
====மறந்தும்==== 
மறக்க 
வேண்டியவற்றை 
====ஞாபகித்தும்==== 
மறந்த நினைவுகள் 
ஞாபகம் வருகையில் 
ஞாபகங்கள் சிலநேரம் 
====மறதியாகி==== 
இன்பமும் துன்பமுமாய் 
இனிய நம் வாழ்வில் 
====ஞாபகமறதிகள்==== 

...கவியாழினி ...

Wednesday 2 October 2013

(அ)லட்சியம் !

இந்த உலகில் அலட்சியம் 
என்றவொன்றால் 
அழிந்துபோனவை பற்பல ... 
லட்சியம் என்றவொன்றால் 
அடைந்தவை சிற்சில ... 
அலட்சியம் என்ற ஒன்றையும் 
அலட்சியம் செய்யாமல் 
முயற்சித்தால் அதில் மறைந்துள்ள 
(அ)லட்சியம் 
நம் கண்ணுக்கு தெரியும் ... 
லட்சியத்தோடு செயல்படு... 
நாளைய வாழ்வை உணதாக்கிடு ... 

...கவியாழினி...

மழையே

சோலைக்கு வரும் சோகம் 
உடனே தீர்க்கவரும் மேகம் 
உயிரினங்களுக்கு நீங்கும் தாகம் 
மயில்களுக்கு ஏற்படும் மோகம் 
சில்லென்ற உணர்வடையும் தேகம் 
தூரமாக ஓடிபோகும் சோகம் 
வீட்டுக்குள் மகிழ்ச்சி வரும்வேகம் 
மனிதவாழ்வில் இது ஒரு பாகம் 
கிடைத்திடுமே நீர் உலகின் ஏகம் 
அதனால் செழித்திடுமே முப்போகம் 
இதற்காக எத்துனையோ யாகம் 
ஏதும் நடத்தாமல் வதுவிடுமென யூகம் 
இவற்றை நினைக்கையில் வரும் ராகம் 
இயற்கையால் நமக்கு கிடைத்த யோகம் 
இனிய கொடை மழையே

...கவியாழினி...

அட்சயப்பாத்திரம்

கோடான கோடி 
கவிதைக்கு 
சொந்தமாகியும் 
புதிதாய் 
எழுத 
தொடங்கும் 
கவிஞனுக்கு 
கோடானகோடி 
கவிதைகளை 
வரவைக்கும் 
அட்சயப்பாத்திரம் 
===நிலவு=== 

...கவியாழினி...