Showing posts with label தன்னம்பிக்கை கவிதைகள். Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை கவிதைகள். Show all posts

Wednesday, 12 March 2014

எல்லையற்ற கடலின் ஓர் அலை


பத்துமாதமாய் வயிற்றில் 
தங்கி பிறந்தவனெ(ளெ)ன்றா 
மொத்தமாக கயிற்றில் 
உயிரை விட வந்தாய் ---இல்லை 

ஒரு துளி விந்தில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒரு துளி விசத்தில் உயிரை 
மரிக்க துணிந்தாய் ---இல்லை 

இருவரின் சக்தியும் ஒன்றாகி 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒருவனா(ளா)ய் கத்தியில் 
உயிரை பிரிக்க வந்தாய்---இல்லை 

உன் பெற்றோரின் உடல் 
சூட்டில் பிறந்தவனெ(ளெ)ன்றா 
நெருப்பின் சூட்டில் 
பஸ்பமாக வந்தாய் ---இல்லை 

பனிக்குட நீரில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
பலகுட நீரென கடலில் 
மூழ்க வந்தாய் ---இல்லை 

தலைகீழாய் இவுலகில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
தலைகீழாய் மலையில் 
விழ வந்தாய் ---உணர்வாயோ 

இரு உடல்களின் காமத்தால் 
பிறக்கவில்லை நீ 
இரு உள்ளங்களின் சங்கமத்தால் 
மண்ணில் பிறந்தாய் 

உள்ளுறுப்புக்களின் மாற்றத்தால் 
பிறக்கவில்லை நீ 
உணர்வுகளின் உச்சத்தில் 
உலகில் பிறந்தாய் 

வாழ்வின் வலி தாங்காமல் 
வந்தாயே உயிர் விட 
நினைப்பாயோ ஒருநிமிடம் 
உன்னை உயிரோடு ஈன்றெடுக்க 
உன் தாய் அனுபவித்த வலியை-அதை 
தாண்டியா உன் வாழ்க்கை வலிக்கிறது ? 

உற்றவள் உள்ளிருந்து துடிக்க 
தன்னிலையறியாது தவித்த 
உன் தந்தையின் தவிப்பின் 
வலியை விடவா 
உன் வாழ்கை வலிக்கிறது ? 

சிறு உயிரான உனக்கு வலி 
பொருத்து வாழ்வு தந்த 
அந்த தாய்தந்தை வலிக்காக 
வலி நிறைந்த உன் வாழ்வை 
வாழ்ந்து காட்ட மாட்டாயோ 

வாழ்வின் எல்லை உன்னைவிட்டு 
உன் உயிர் பிரியும் வரை அல்ல 
உன் உள்ளத்தை விட்டு 
உன் தன்னபிக்கை பிரியும் வரை 

பரந்த கடலாய் இவ்வுலகினிலே 
ஓயாத அலைகலென 
எல்லோர்க்கும் ஓர் வாழ்வுண்டு 
அதில் உன் வாழ்வும் 
எல்லையற்ற கடலின் ஓர் அலை ... 

...கவியாழினிசரண்யா...

Thursday, 14 November 2013

இழந்துவிடாதே



பெற்றோரை இழந்தவனென 
உன்னை நீயே கருணையுரைக்காதே 
பெற்றோரை இழந்தாலும் 
நற்பெயர்பெரும் பெருவாழ்வு வாழலாம் 

உறவினர்களால் உதறி 
தள்ளப்பட்டவனென உணர்விழந்து 
ஓரம் போகாதே 
உறவினரை இழந்தாலும் 
உலகில் உன்னத வாழ்வு வாழலாம் 

கல்வி கற்காதவனெனஉன்னை 
நீயே மக்கிக்கொள்ளாதே 
கல்வி இழந்தும் கற்க்காமலும் 
தம் உண்மை அறிவால் கல்வி 
பயில்பவர்களுக்கு வழிக்காட்டியாய் 
வாழ்ந்த பலர்போல் வாழலாம் 

அடிப்படை உரிமைகளையும் அடைய 
முடியாதவனென அழுகி சாகாதே 
உடையின்றி உணவின்றி 
உரைவிடமின்றியும் உன்னத 
உழைப்போடு ஊரே வியக்க 
உன்னத வாழ்வு வாழலாம் 

நண்பர்களும் யாருமற்று 
நாதியற்றவனாய் வாழ்கிறேனென 
நசுங்கிப்போகாதே நாளை உன் 
முன்னேற்றத்தில் நல்லநண்பர்களும் 
உன் பாதையில் தேடி வந்து 
களிக்கும் வாழ்வு வாழலாம் 

பெற்றோரும் மற்றோரும் 
உற்றோரும் நண்பரும் 
உயிரும் இல்லாமலும் 
இவ்வுலகில் நற்பெயரோடு 
புகழோடு பல வாழ்வு வாழலாம் 
நீ தன்னம்பிக்கை 
இழந்து போனால் இருந்தும் 
இறந்தே வாழ்வாய் 

இழந்துவிடாதே எப்போதும் 
உன் வாழ்கையெனும் 
...தன்னம்பிக்கையை...
...கவியாழினி ...

Saturday, 9 November 2013

வெற்றி மகுடம்



பிறப்பு முதல் இறப்புவரை இங்கு 
அனைவரின் ஆவல் வெற்றியே 

எளிதில் கிடைத்த வெற்றி வெறும் 
எள்ளளவில் மகிழ்ச்சி தரும் 

குறுக்குவழியில் பெற்ற வெற்றி குறுகிய 
நேரத்தில் மறைந்து போகும் 

Friday, 18 October 2013

கொலையா? தற்கொலையா?

வந்து பிறந்த நாள்முதல் 
வளர்ந்த நாட்களெல்லாம் 
வறுமையில் கழிகிறது 
வலியோடு வாழ்வின்வழி
வழுக்கிப் போகவே 
வாழவேண்டாமென 
வாழ்வை  முடிக்க வந்தாயோ தற்கொலைக்கு ?

உயிரின் உயிராகி 
உணர்வில் உள்புகுந்து 
உன்னுள் நுழைந்தவள் 
உன்னவள் இல்லையென 
உதறித்தள்ளி உதாசித்து 
உன்னைவிட்டு போனாளென 
உயிரைவிட வந்தாயோ தற்கொலைக்கு ?

தாய் விட்டுப்போனாள் அனாதையாய் 
தந்தை ஓடிப்போனான் யாரோடோ  
தரணியில் வாழும் மக்களின் 
தரங்கெட்ட வார்த்தைகள் 
தங்கமான உன் எண்ணங்களை 
தகரமாக எடைபோட வேண்டாமென 
தாய்சென்ற இடந்தேடி வந்தாயோ தற்கொலைக்கு?

பள்ளியிலே முதலிடம் 
பரிசுகளும் பலப்பெற்று 
பட்டமெல்லாமும் பதக்கத்தோடு
படித்து பட்டதாரியாய்
படிப்புக்கள் உன்பெயரை அலங்கரிக்க 
பசிப்போக்க முடியா நிலையில் 
பழிதீர்க்க வந்தாயோ தற்கொலைக்கு ?

தொட்டதெல்லாம் தோல்வியாகிறது 
தொலைந்துப்போனது என் வாழ்வாகியது 
தொடரும் விரக்தியும் வேதனையும் 
தொல்லைகளாய் குவிந்த வண்ணம் 
தொடர்ந்து வாழவிடாமல் விரட்டிட 
தொங்கிவிடலாமென துணிந்து வந்தாயோ ?

சிறுநிமிடம் சிந்திப்பயோ 
சிறப்பான உன் சிந்தைக்கொண்டு
சிறிது நேரத்தில் போகும் உன்உயிரால்
சிரமமென்று நீ நினைத்தவை மாறிடுமா?
சீ கோழை என்று உன்னை  ஏசிடுமா?
சிறப்பான அழகிய வாழ்வினை 
சிதைத்து சிரமத்திற்கு ஆளாகாதே 

வாழ்வதற்கு ஆசைக்கொண்டு 
வாழ்வை வரவேற்றிடு 
வழிகள் உதித்திடும் பலவென்று  
வலியோடு இருந்தாலும் 
வாழ்வில் நல்வழியை தேர்ந்தெடு 
வாழ்வின் வசந்தங்களை ரசித்திடு 
வரலாற்றில் உன் பெயரை பதித்திடு 

இனி உன் முடிவு உன் கையில் 
இனி   தற்கொலை செய்வாயோ 
இல்லை தற்கொலை எண்ணத்தை 
இல்லாது கொலை செய்வாயோ
இடித்துக்கூறு இக்கணமே 
இனி கொலையா? தற்கொலையா?    

 ...கவியாழினி...

Saturday, 5 October 2013

வாழ்வோம் வாழ்வை !

ஒரே நாளில் பூத்துமடியும் பூக்கள் கூட 

மலரும் போதும் சிரிக்கின்றன ! 
மண்ணில் விழும்போதும் சிரிக்கின்றன ! 
செடியில் இருக்கும் போதும் சிரிக்கின்றன ! 
அனைவர் மனதிலும் நீங்காமல் வாழ்கின்றன ! 

ஆனால் 
மனிதர்கள் பிறக்கும் போதும் அழுகின்றோம் ! 
இறக்கும்போதும் மற்றவரை அழ வைக்கிறோம் 
இருக்கும் வரை அனைவரையும் மகிழ்விக்கலாமே! 

இறக்கத்தானே பிறந்தோம் ! 
இரக்கத்தோடு வாழ்வோம் !

...கவியாழினி...

தன்னம்பிக்கைத் துளிகள்

கண்ணீர் குளத்தில் 
மலர்ந்த வெண் தாமரை !!! 

கவலைகள் நிரம்பிய 
குளத்துள் மூழ்கிய போது 
உதவியாய் வந்த நீச்சல் !!! 

சுற்றி இருப்போர் 
உதாசிக்க ஊனமான 
எனக்கு ஊக்கம் தந்த உணர்வு!!! 

கண்தெரியாதவனாய் நான் 
நடைபயில எனக்காக 
துணைக்கு வந்த கைத்தடி !!! 

பெற்றோரும் மற்றோரும் 
அலட்சியம் செய்கையில் 
என் லட்சியம் காட்டிய கண்ணாடி!!! 

கரப்பான் தின்று 
கிடைத்த புத்தகத்தில் 
கண்டெடுத்தக் கரு!!! 

நிர்வாணமாய் நான் 
நின்றிருக்கையில் மானம் 
காக்க வந்த ஆடை!!! 

====தன்னம்பிக்கை ==== 

...கவியாழினி...

Thursday, 3 October 2013

வெள்ளை காகிதம்


நாம் ஒவ்வெருவரும் 
இவ்வுலகிற்கு வெள்ளை 
காகிதமாய் வருகிறோம்! 

சிலர் கிறுக்கப்படுகின்றனர், 
சிலர் கிழித்து எறியப்படுகின்றனர் , 
சிலர் கசக்கி குப்பையில் வீசப்படுகின்றனர், 

ஆனால் சிலர் கவிதையாய் எழுதி 
பின் வாசிக்கப்படுகின்றனர் ! 
உனக்கென ஒரு வாழ்வை 
தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிடு ! 

வரலாற்றில் எழுதப்படுவாய் 
===கவிதையாக ! ===
இல்லையென்றால் கசக்கி எறியப்படுவாய் 
===காகிதமாக !===
    
 ...கவியாழினி...

கருப்பு உலகில் வெள்ளை முத்து


கலகலப்பு வாழ்க்கையில் 
கற்கண்டாய் கன்னிப்பருவம் 
கண்ணை மறந்து காதல் பிறந்தது 
காமுகனாய் நின்ற காதலனுடன் 

கற்புக்கு இடம்வைத்து காத்தேன் 
கயவனின் பார்வையில் கரைந்துபோனேன் 
கட்டிலுக்கும் போர்வைக்கும் இரையானேன் 
கள்வனிடம் காரியம் முடிந்தவளானேன் 

கணநிமிடத்தில் இழந்துபோனேன் 
கற்பை மட்டுமல்ல வாழ்வையும் 
கருவாக உருவான உன்னை 
கருக்கலைப்புக்கு ஆட்படுத்தவில்லை 

கள்ளமற்ற உனக்கு கள்ளிப்பாலூட்ட 
கல்மனம் கொஞ்சமும் எனக்கில்லை 
கல்லோடு குப்பையில்வீச மனமில்லை 
கயவர்களின் கேலிப்பேச்சு கழுத்தில் தாலிஇல்லை 

கன்னியிவள் கற்பிழந்தும் கண்மணிக்காக 
கண்ணீர்மல்க பாழ்பட்டபோதும் பால்சுரந்தேன் 
கண்ணே உதிரத்தை பாலாக கொடுக்கவில்லை 
கல்லாகிபோனவள் உணர்வை பாலாக ஊட்டினேன்

கல்லுடைத்து ரத்தம் சிந்தினாலும் 
கனியே ரௌத்திரமுடன் ஆளாக்கினேன் 
காற்றாய் சுற்றி புறப்படு 
கலங்காமல் உலகில் நடைபோடு 

கற்கண்டாய் நீ இருந்தாலும் 
கயவனென்றால் சீறி எழு 
கஞ்சி குடித்து வளர்ந்தாலும் 
கலக்கமில்லாமல் கற்பை காத்திடு 

காமுகனாய் வந்தால் கண்ணாலே எரித்திடு 
கரம் தீண்ட நினைத்தால் அனலாக கொதித்திடு 
கலங்கம் செய்ய நெருங்கினால் பாதாளம் காட்டிடு 
கண்ணியம்மா உன் தாயின் நிலையிலே 

கண்முழிக்க முடியாமல் வாழ்வை முடித்த 
கண்மணிகள் காணாமல் பலரிங்கு 
கருவிலே சிதைந்துபோன சிசுவும் பலவுண்டு 
கம்பீரமாய் நீயும் சாதிப்பாய் நாளையென 

காற்றும் தூசும் பாராமல் கண்ணாக 
கவலை மறைத்து வளர்க்கிறேன் 
கண்முன்னே உனக்கு வாழ்வின் 
கதை சொல்லி கருத்தை அள்ளி 
காண்போர்க்கு என் வாழ்வில் - நீ 
கருப்பு உலகில் வெள்ளை முத்தாக!!! 

...கவியாழினி ...

Wednesday, 2 October 2013

(அ)லட்சியம் !

இந்த உலகில் அலட்சியம் 
என்றவொன்றால் 
அழிந்துபோனவை பற்பல ... 
லட்சியம் என்றவொன்றால் 
அடைந்தவை சிற்சில ... 
அலட்சியம் என்ற ஒன்றையும் 
அலட்சியம் செய்யாமல் 
முயற்சித்தால் அதில் மறைந்துள்ள 
(அ)லட்சியம் 
நம் கண்ணுக்கு தெரியும் ... 
லட்சியத்தோடு செயல்படு... 
நாளைய வாழ்வை உணதாக்கிடு ... 

...கவியாழினி...