Monday, 28 October 2013

பெண்ணிவளின் சேலை!!!

பால்வண்ண 
பருத்தியில் நூலெடுத்து 
வானமென்னும் 
 தறிகொண்டு 
வானவில்லின் 
வண்ணமெடுத்து 
நிலாவில் சாயம் ஏற்றி 
தேவர்களும் தெளிவாக 
நெய்தெடுத்தது 
பெண்ணிவளின் சேலை!!! 

...கவியாழினி...

Saturday, 26 October 2013

சந்திப்போமடா!!! சந்திப்போமடி!!!


என் இதயம் சொல்ல துடிக்குது 
என் இதயம் கேட்க்க தவிக்குது 
நம் அன்பை பகிர்ந்து கொள்ள 
அருகே அருகே அமர்ந்து கொஞ்ச 


பார்த்த நாட்களின் மகிழ்ச்சியை 

பாராத நாட்களின் வெறுப்பினை 
பேச நினைத்த தருண உணர்வினை 
பேசாமல் போன நாட்களின் தவிப்பினை 


இருவரும் பகிர்ந்திட பேசி ரசித்திட 

சந்திப்போமடா!!! சந்திப்போமடி !!! 

Wednesday, 23 October 2013

அந்த ஊர்


செக்கச்சிவந்த வானம் , 
கொக்கரக்கோவென கூவும் சேவல் , 
பசுமை எழில் கொஞ்சும் 
கண்களில் படுமிடமெல்லாம் ; 

சிட்டுக்குருவிகளும் ,குயிலும் 
மாறிமாறி கானம்பாடி இன்புறுத்த , 
மனதில் மகிழ்ச்சிபடர மலர்கள் மலரும் 
அதைகண்டு காதல்கொண்டு 
வண்டுகள் ரீங்காரமிடும் , 

வாலை ஆட்டிக்கொண்டு 
ஆசையோடு ஓடிவந்து நிற்க 
பார்ப்போர் நின்ற இடத்தில் 
பசியறிந்து அன்போடு உணவிட 

உண்டுவிட்டு இரவு முழுதும் 
விழித்திருந்து ஊர்காக்கும் நாய்கள் 
அங்கும் இங்கும் ஓடி விளையாட , 

கட்டிளங்ககாளையர்களின் 
வீரவிளையாட்டும், குட்டி குட்டி 
வாண்டுகளும் உடன் கூட்டமாக 
விளையாடும் தெருக்களோடு , 

தன் களைப்பு தெரியாமலிருக்க 
பாடல் பாடிக்கொண்டே 
களைபரித்தும் நாற்று நட்டும் 
செழித்து இருக்கும் 
கிராமம் அல்ல அது , 

))))))((((((!*!*!*!*!*!*!*!*!*!*))))))(((((( 

எங்கு நோக்கினும் 
வாகனங்கள் அலைமோத 
செவிகளில் எப்போதும் 
ஓயாது இரைச்சல் ஒலிக்க , 

இரவும் பகல்போல் மக்கள் கூட்டம் 
அலைமோதிக்கொண்டே இருக்கும் , 
ஆடவரும் பெண்டீரும் பார்ப்பதற்கு 
ஒன்றாகவே காட்சியளிக்கும் 

கால்வைக்கும் இடமெங்கும் 
சலவைக்கல்லும் கருங்கல்லுமாய் 
வழவழப்பாய் காட்சியளிக்கும் 
மண்துகள்கள் பார்ப்பதே அரிதாகும் , 

பத்தும் பனிரெண்டுமாய் உயர்ந்தே 
காட்சியளிக்கும் கட்டிடங்கள் , 
மாடியிலும் பால்கனியிலும் 
இருந்தாலிருக்கும் சிற்சிறு 

பச்சை நிற செடி கொடிகள் 
என காட்சியளிக்கும் 
நகரமுமாய் இல்லாது 

))))))((((((!*!*!*!*!*!*!*!*!*!*))))))(((((( 

சிறிது பச்சை பசேலென்று 
ஒருபுறம்; ரியல் எஸ்டேட்டிற்காக 
பசுமையை கூறுப்போட்டு 
விற்கும் நோக்கில் நடப்பட்ட 
கற்கள் கொண்டு மறுபுறம் 

நிமிடம் தவறாமல் ஓடும் 
போக்குவரத்தாய் இல்லாது 
ஏதோ இல்லையென்று சொல்லாமல் 
இருக்கிறதென தெரியஓடும் வாகனங்கள் 

வளர்ச்சியென்று முக்கிய பகுதிகளில் 
தார் சாலையும் செம்மண்ணோடு 
உள் சாலைக்களுமாய் காட்சித்தர 

சிட்டுக்குருவிகளையும் , 
தும்பிகளையும் தொலைத்தாலும் 
இருக்கிறது பறவைகளென 
சில பறவைகள் பறந்துவரும் , 

தேய்ந்த கிராமமாகவும் , 
வளர்ந்து(மாறி)வரும் நகரமாகவும் 
காட்சியளித்தது அந்த ஊர். 

...கவியாழினி...



Sunday, 20 October 2013

கண் அன்பு நீ

வேறுபட்ட வகையான  பணி
வெவ்வேறு கலாச்சார குடும்பம்
வேற்றுமையான பழக்கவழக்கங்கள்
ஒன்றாக சங்கமித்தது இருமனங்கள்

பேசிய பல  மொழிகளில்
ஒற்றுமையானது இருவருக்கும்
தமிழும் ஆங்கிலமும் 

அதிகம் வார்த்தைகள் பரிமாறவில்லை
பார்வைகள் பலவற்றை பரிமாறின

ஆசையின் அர்த்தங்களை அவர்களின்
முகத்தின் மாற்றங்கள் காட்டிக்கொடுத்தன

அவள் வரவு காணாமல் அனிச்சம்மலராய்
அவன் முகம் வாடும்
அவனின் அன்புப்பார்வையில்  அவள்
நாணிக் கண்புதைப்பாள்

இவளின் மனம் புரிந்து அவன் செயல்படுவான்
அவன் குணம் அறிந்து இவள் செய்திடுவாள்

அவள் கைப்பட்டதால் பிடிக்காததும்
பிடித்தது இவனுக்கு
இவனுக்கு பிடிக்காததால் பிடித்ததும்
வெறுத்தது அவளுக்கு

கோவங்கள் வருகையில் யாரேனும்
விட்டுக்கொடுத்தால் நல்லதென நினைக்க
இருவரும் விட்டுக்கொடுப்பார்கள்
விட்டுக்கொடுக்க முடியா அன்பிற்காக

முதன்முதலாய் மனம்திறக்க
தன் காதலை வெளிப்படுத்த
நேருக்கு நேர் நின்று மனதின்
வெளிப்பாடை தங்களின் இதழ்
திறந்து சொல்லிக்கொண்டனர்
===கண் அன்பு நீ ===

---கண்------ eye ----------- I
--அன்பு ----காதல் ----LOVE
-----நீ--------YOU--------------U

...கவியாழினி...



Friday, 18 October 2013

கொலையா? தற்கொலையா?

வந்து பிறந்த நாள்முதல் 
வளர்ந்த நாட்களெல்லாம் 
வறுமையில் கழிகிறது 
வலியோடு வாழ்வின்வழி
வழுக்கிப் போகவே 
வாழவேண்டாமென 
வாழ்வை  முடிக்க வந்தாயோ தற்கொலைக்கு ?

உயிரின் உயிராகி 
உணர்வில் உள்புகுந்து 
உன்னுள் நுழைந்தவள் 
உன்னவள் இல்லையென 
உதறித்தள்ளி உதாசித்து 
உன்னைவிட்டு போனாளென 
உயிரைவிட வந்தாயோ தற்கொலைக்கு ?

தாய் விட்டுப்போனாள் அனாதையாய் 
தந்தை ஓடிப்போனான் யாரோடோ  
தரணியில் வாழும் மக்களின் 
தரங்கெட்ட வார்த்தைகள் 
தங்கமான உன் எண்ணங்களை 
தகரமாக எடைபோட வேண்டாமென 
தாய்சென்ற இடந்தேடி வந்தாயோ தற்கொலைக்கு?

பள்ளியிலே முதலிடம் 
பரிசுகளும் பலப்பெற்று 
பட்டமெல்லாமும் பதக்கத்தோடு
படித்து பட்டதாரியாய்
படிப்புக்கள் உன்பெயரை அலங்கரிக்க 
பசிப்போக்க முடியா நிலையில் 
பழிதீர்க்க வந்தாயோ தற்கொலைக்கு ?

தொட்டதெல்லாம் தோல்வியாகிறது 
தொலைந்துப்போனது என் வாழ்வாகியது 
தொடரும் விரக்தியும் வேதனையும் 
தொல்லைகளாய் குவிந்த வண்ணம் 
தொடர்ந்து வாழவிடாமல் விரட்டிட 
தொங்கிவிடலாமென துணிந்து வந்தாயோ ?

சிறுநிமிடம் சிந்திப்பயோ 
சிறப்பான உன் சிந்தைக்கொண்டு
சிறிது நேரத்தில் போகும் உன்உயிரால்
சிரமமென்று நீ நினைத்தவை மாறிடுமா?
சீ கோழை என்று உன்னை  ஏசிடுமா?
சிறப்பான அழகிய வாழ்வினை 
சிதைத்து சிரமத்திற்கு ஆளாகாதே 

வாழ்வதற்கு ஆசைக்கொண்டு 
வாழ்வை வரவேற்றிடு 
வழிகள் உதித்திடும் பலவென்று  
வலியோடு இருந்தாலும் 
வாழ்வில் நல்வழியை தேர்ந்தெடு 
வாழ்வின் வசந்தங்களை ரசித்திடு 
வரலாற்றில் உன் பெயரை பதித்திடு 

இனி உன் முடிவு உன் கையில் 
இனி   தற்கொலை செய்வாயோ 
இல்லை தற்கொலை எண்ணத்தை 
இல்லாது கொலை செய்வாயோ
இடித்துக்கூறு இக்கணமே 
இனி கொலையா? தற்கொலையா?    

 ...கவியாழினி...

Thursday, 17 October 2013

வியர்வை வாசம்

சோம்பல் முறித்து எழும் 
இனிய காலைவேலை - என் 
அருகமர்ந்து தலைகோதி தேனீர் 
அன்பாய் தருகையில் 
உழைப்பின் வெளிப்பாடாய் - வரும் 
அவள் வியர்வை வாசம் 

கல்சுமந்து மண்சுமந்து 
கால்கடுக்க வேலையென்றாலும்- என் 
வயிற்றின் பசிநேரத்தில் 
விரைந்து வந்து பாசத்தோடு 
அள்ளியெடுத்து ஊட்டுகையில் - வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அவள் கல்லுடைத்து கஷ்டப்பட்டு 
செய்திட்ட பணிகள்ஆயிரம் - நான்  
கல்லூரிக்கு சென்றுவர ;வயதுவந்த 
பிள்ளை எனக்கும் தலை வாரி 
அழகுப்படுத்தி அனுப்புகையில்-வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அலுவலகம் நான்சென்று வர 
பக்குவமாய் சமையல் செய்து -  என் 
வருகை பார்த்து காத்திருந்து    
பாசத்தோடு  முந்தானையால்
என் முகம் துடைக்கையில்  - வரும் 
அவளின் வியர்வை வாசம் 

அவள் கல்லறையில் ஆயிரமாயிரம்  
மலர்கள் மன்ம்பரப்பியும்  -என்
மனம் மண்டியிட்டு கதறுகையில் 
உணர்கிறது என் நலம்விரும்பி 
என்னுடன் இருக்கும் உன்னதமான -என் 
தாயவளின்  வியர்வை வாசத்தை   

கோடிக்கும் மேலான சொத்துக்கள்  
ஆயிரமாயிரம் பணியாட்கள் -என்  
மனைவி வாசனை உணர்ந்தும்  
மழலை வாசனை அறிந்தும் 
என்மனம் ஏங்கி தவிக்கிறது -என் 
தாயவளின் வியர்வை வாசத்திற்கு .
 
 ...கவியாழினி...

Monday, 14 October 2013

மாலை

தன் நிலா 
காதலியின் 
வரவை
ஒளிந்திருந்து  
ரசிக்க  
தன் 
ஒளிக்கதிர்களை 
சுருக்கி 
மறைந்துக்கொண்டான்
சூரியன்
தோன்றியது 
இதமான 
வேலை அது 
=மாலை= 
...கவியாழினி...