Sunday, 24 August 2014

நெருப்புக் கூண்டு

பறந்து விரிந்த உலகுதன்னில் - சிறகடித்த 
பறவையிவள் எண்ணங்களை எடுத்து 
எரிதீயில் போட்டு பொசுக்குகின்றனர்- சமுதாய 
எதிர்ப்பார்ப்பென்று என்னை ஏமாற்றி 

அறிவு சுரங்கத்தில் அருளிய - பொருளென்று 
அறத்தோடு வளர்த்து அழகுநடைபோட 
புகழ் முன்னேற்றம் பெண்ணிற்கு - வேண்டாமென 
புழுகலேற்றம் மனதில் நிரப்புகிறார்கள் 

பருவ வயதினிலே முடித்திடனும் -திருமணம் 
பக்குவமாயென்று பனிக்கட்டியாய் உருக்கி 
மயக்குகின்றனர்; பள்ளி வயதிலே -பதியம்போட்டு 
மனதில் பசுமரத்தாணியான என்லட்சியத்தை 

உண்மைகளை எடுத்துக் சொன்னால் - ஊரார்க்கு 
உணராத வாயாடியென்று பெயர் 
தற்காப்புக் கலை கற்று - நடைபோட்டால் 
தகாத அடங்காப்பிடாரி இவள் 

சுதந்திரமென சுற்றித்திரிந்து சுடும் -பாதைச்செல்ல 
சுரத்தை இல்லாத பெண்ணல்ல 
அடைப்பட்ட கூண்டில் சுதந்திரமுடன் - வாழ 
அடிமை பெண்ணும் நானல்ல 

சுதந்திர நாட்டினில் சுதந்திரமுடன் - என் 
கூண்டின் சுற்றுத்தளம் என்சுதந்திரம் 
நெகுகிறது என்மனம் ; திறமைகள்  பொசுங்க 
நெருப்பிலிட்ட என்மனம் வேகுகிறது 

(சமூகமென்னும் நெருப்புக் கூண்டுக்குள் அடைப்பட்டு நானிங்கு ,என முன்னேற துடிக்கும் ஒரு பெண்ணின் குமுறல்கள் ) 
...கவியாழினி...

Saturday, 23 August 2014

கடிதங்கள்


கட்டுக்கடங்கா பாசத்தையும் 
கணிக்க இயலா நேசத்தையும் 
சொல்லி முடிக்க முடியாமல் 
சொல்லாமலே அறியவைக்கும் 

எண்ணிலடங்கா எண்ணங்களின் 
வெளிப்பாடாய் எத்தனையோ 
உறவுகளின் குவியலாய் 
தொன்று தொட்டு தொடர்ந்து வந்த 

தொய்வில்லா நன்றிமறவா பண்பாடது 
ஓர் ஊரனைத்தும் விசாரித்து முடியாமல் 
ஓர் ஓரத்திலும் நுணுக்கி எழுதிவிசாரிக்கும் 
வரும் நாளை எதிர்ப்பார்த்து 

வந்து வந்து எட்டிப்பார்க்கும் சுகம் 
வந்துசேர்வதை எண்ணி 
வயது பெண் முதல் 
வயதான மூதாட்டி வரை 
காத்திருந்து கையில் பெரும் சுகம் 

முன் தெரு மல்லிகா அக்கா முதல் 
முள்ளுக்காட்டு முனுசாமி அண்ணன் 
வரை நலம் விசாரித்து 

பண்பாய் வீட்டு பசு கன்றையும் 
பக்கத்து வீட்டு கந்தசாமி 
தாத்தாவின் கைத்தடி வரை 

தன் கண்மூடாமல் கணக்கிட்டு விசாரித்து 
தன் கையில் வைத்திருக்கும் 
பேனாவின் மை தீரும் வரை 

தீட்டி முடித்து பின்பும் அதை 
விட்டுட்டனே என்று புலம்பி தீட்டும் 
ஓரத்தில் நுணுக்கி விசாரிக்கும் அன்பு 

காவல் தெய்வமாய் கண்ணுக்கு தெரியும் 
காவி உடை அணிந்த தபால்காரர் 

என் பையன் எழுதிருக்கான் படித்து சொல்லடி 
என் தங்கம் என்று பேத்தியை கொஞ்சும் பாட்டி 
கணவனின் விசாரிப்பை படித்து கண்ணீரில் 
கண் நேரில் பார்த்த மகிழ்சியில் 
காகிதத்தை கட்டியணைக்கும் மனைவி 

இது அனைத்திலும் நிரம்பி வழியும் 
ஒன்றேஒன்று இந்த கள்ளமில்லா 
உள்ளங்களின் கணிக்க முடியா அன்பு 

அந்த காலத்தில் எழுதிய 
கடிதங்களை பிரதி எடுத்தால் 
அவை இக்கால நீண்ட முழு தாளின் 
நான்கு பக்கம் நிறையும் 

அத்துணையும் அழகான அன்பின் ஏக்கங்கள் 
ஆசையாய் எடுத்து படித்தேன் அந்தக்காலத்தில் 
ஆறுதலாய் வந்து போன கடிதாசி 
என்ற கடிதங்களை ஏக்கத்தோடு ... 

...கவியாழினிசரண்யா..


Sunday, 27 July 2014

நின்னோடு என் நினைவுகள்

நீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை 
நீ என்னோடு இருப்பதான நினைவுகள் 
தோற்கடிக்கின்றன ; நீ என்னோடு 
இல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற 
நிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ 

கடற்கரை மணலில் என் கால்தடங்களின் 
அருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி 
இல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே 
எண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான் 

என்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ 
சப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள் 
எழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய் 
வீணை மீட்டிகொன்டே இருக்கிறது 

வருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும் 
சித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன் 
உன் மார்பின் கதகதப்பில் என் தலை வைத்து 
உறங்கிய அந்த சிறு நாட்களோடே ஒவ்வொரு 
இரவும் உறக்கம் கொள்கிறேன் நான் 

எவ்வளவு சோகங்கள் என்னை சூழ்ந்தாலும் 
உன்னோடு வாழ்ந்த நாட்கள் மனதில் ஓட 
மகிழ்ச்சி கொட்டும் ;எத்துனை வேகமாக வந்தாலும் 
என்னை தாண்டி செல்ல மறுக்கிறது உன் நினைவுகள் 

எல்லாவித அழகு ஆடைகளை வாங்கியும் 
அழகு குறைந்தே தோன்றுகிறது பெட்டியில் 
பொக்கிசமாய் உறங்கும் நீ வாங்கித்தந்த 
பாவாடை சட்டையின் அழகின் முன் 

அந்நாட்களில் களைத்து இறங்கி வந்து 
இழைத்த உடம்போடு உணவு உண்கையில் 
உழைத்த உன்மீது வரும் வியர்வை நறுமணத்தை 
வாசித்துகொண்டே இந்நாட்களில் தினமும் 
உண்கிறேன் என் மதிய உணவை 

ஊராரும் உடனிருப்போரும் நீ இல்லையெனலாம் 
என்னுள்ளிருக்கும் உன்னை என்னையன்றி 
உன்னால் கூட உணரமுடியாது "அப்பா " -இவள் 
உன் உணர்வுகளை சுவாசித்து வாழ்வைநேசிப்பவள் 

நான் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தாலும் 
என்றும் நின்னோடு என் நினைவுகள். 


...கவியாழினிசரண்யா...

Sunday, 20 July 2014

நட்பெனும் நண்பனுக்கு


என்கதை பல உன்னிடம்  சொல்லிட வார்த்தை தேடுகையில் 
அத்துனை வார்த்தைகளும் இல்லாது மறைந்து 
உன் அன்பெனும் மனம், புரிந்துகொள்ளும்படி -நான்  
மௌனத்தை மட்டும் உதிர்க்கிறேன் எப்போதும் 

முகத்தில் போலிஇல்லா புன் சிரிப்போடு ,
மனதில் கள்ளமில்லா உண்மை அன்போடு ,
எண்ணத்தில் களங்கமில்லா நல் நட்போடு - தொடரும்
உன் நட்பில் நடைபோடுகிறேன் நாட்களோடு

மாயகண்ணனின் புல்லாங்குழல்  இசை 
மனதில் காதல் சொட்டவைக்கும்  ராதைக்கு
மனம் நிறைந்த நண்பன் உன் வார்த்தைகள் -தன்னபிக்கை 
மரம் வளர்க்கும் நட்போடு  இந்த தோழிக்கு 

மகிழ்ச்சியோடு மனம் நினைப்பதெல்லாம்   
காட்சியாக  தருமாம் கதைகளில் சொர்க்கம் 
என் மனம் காண்கிறது மகிழ்ச்சி நிறைந்து - என்றும்
உன் நட்பால் நிஜ வாழ்வில் சொர்க்கம்.

                           ...கவியாழினி சரண்யா ...

Sunday, 13 April 2014

ஊர்வலம்


திருவாரூர் தேர் 
நகர்ந்தால் 
அது 
நகர்வலம் 

பெண்ணே 
நீ 
அங்கு 
நடந்தால் 

அந்த தேரும் 
உன் பின் 
வரும் 
ஊர்வலம் . 

...கவியாழினிசரண்யா ...

Saturday, 5 April 2014

தா(பே)ய்மையோடு ஒரு குரல்


மும்மாரி பொழிய வைத்து 
கம்மாவும் நிரம்ப வைத்து 
முத்தாக தானியம் 
விளைய வைத்து 
சுத்தமாக சுவாசிக்க வைத்தேன் 
என் ம(மா)க்களே 

சத்தான உணவோடு 
புத்தியும் தூண்டிவிட்டு 
அறிவியலும் கற்க 
அறிவு வளர்த்தேன் 
ஆக்கங்கள் பெருகிடவே 
களிப்பும் கண்டேன் 
அழிவுகளை அதிகமாக்கி 
ஆடம்பரத்தில் அமிழ்ந்தீர்களே 
என் அன்(வம்)பிற்க்குறியவர்களே 

வண்ண உணவுகளும் 
வாகன பெருக்கமும் 
குளிர்பதன சாதனமும் 
நிமிடத்தில் நிமிரும் உற்பத்தியும் 
அபார வளர்ச்சியென்று 
அடுக்கடுக்காய் மரங்களை 
வெட்டி வாழும் 
என் பி(தொ)ள்(ல்)ளை(லை)களே 

மாடிமேல் மாடியென 
பாரத்தை என் தலையில் வைத்து 
விரைவாக சென்றுவர சுரங்கம் வைத்து 
கழிவுகளை நிரப்பிடவே 
பாதாளத்தில் கொட்டி 
வாழும் மரங்களை வெட்டி 
வலுவான என்னை 
வலுவிழக்க வைத்தீர் 
என் செல்வ(ஜென்ம )ங்களே 

வலி பொருத்து வாழ வைத்தேன் 
வலி தாங்க முடியாமல் போகவே 
பேரழிவுதர ஆட்ப்படுத்தப்பட்டேன் 
இனி என் நிலை என் கையிலில்லை 
வசதிதேடி வாழுமுன்னே - இயற்கை 
வளம் காத்து வாழ்வை வாழப்பாருங்களேன் 
என் மதி(கெ )கொண்(ட்)ட மானிட(ரே)னே. 
  ...கவியாழினிசரண்யா... 


Thursday, 20 March 2014

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

  
பணப்பெட்டி 
வாங்க 
ஆசைகொண்டு 

தீப்பெட்டி 
அடுக்கி 
வாழ்ந்து 

ரண(ம்)கெட்டியாக 
நிலை 
கடந்து 

கனபெட்டியாய் 
செல்ல 
முடிகிறது 

எங்கள் 
வாழ்க்கை 
சவபெட்டியில். 

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

...கவியாழினி...