Sunday, 27 July 2014

நின்னோடு என் நினைவுகள்

நீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை 
நீ என்னோடு இருப்பதான நினைவுகள் 
தோற்கடிக்கின்றன ; நீ என்னோடு 
இல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற 
நிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ 

கடற்கரை மணலில் என் கால்தடங்களின் 
அருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி 
இல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே 
எண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான் 

என்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ 
சப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள் 
எழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய் 
வீணை மீட்டிகொன்டே இருக்கிறது 

வருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும் 
சித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன் 
உன் மார்பின் கதகதப்பில் என் தலை வைத்து 
உறங்கிய அந்த சிறு நாட்களோடே ஒவ்வொரு 
இரவும் உறக்கம் கொள்கிறேன் நான் 

எவ்வளவு சோகங்கள் என்னை சூழ்ந்தாலும் 
உன்னோடு வாழ்ந்த நாட்கள் மனதில் ஓட 
மகிழ்ச்சி கொட்டும் ;எத்துனை வேகமாக வந்தாலும் 
என்னை தாண்டி செல்ல மறுக்கிறது உன் நினைவுகள் 

எல்லாவித அழகு ஆடைகளை வாங்கியும் 
அழகு குறைந்தே தோன்றுகிறது பெட்டியில் 
பொக்கிசமாய் உறங்கும் நீ வாங்கித்தந்த 
பாவாடை சட்டையின் அழகின் முன் 

அந்நாட்களில் களைத்து இறங்கி வந்து 
இழைத்த உடம்போடு உணவு உண்கையில் 
உழைத்த உன்மீது வரும் வியர்வை நறுமணத்தை 
வாசித்துகொண்டே இந்நாட்களில் தினமும் 
உண்கிறேன் என் மதிய உணவை 

ஊராரும் உடனிருப்போரும் நீ இல்லையெனலாம் 
என்னுள்ளிருக்கும் உன்னை என்னையன்றி 
உன்னால் கூட உணரமுடியாது "அப்பா " -இவள் 
உன் உணர்வுகளை சுவாசித்து வாழ்வைநேசிப்பவள் 

நான் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தாலும் 
என்றும் நின்னோடு என் நினைவுகள். 


...கவியாழினிசரண்யா...

Sunday, 20 July 2014

நட்பெனும் நண்பனுக்கு


என்கதை பல உன்னிடம்  சொல்லிட வார்த்தை தேடுகையில் 
அத்துனை வார்த்தைகளும் இல்லாது மறைந்து 
உன் அன்பெனும் மனம், புரிந்துகொள்ளும்படி -நான்  
மௌனத்தை மட்டும் உதிர்க்கிறேன் எப்போதும் 

முகத்தில் போலிஇல்லா புன் சிரிப்போடு ,
மனதில் கள்ளமில்லா உண்மை அன்போடு ,
எண்ணத்தில் களங்கமில்லா நல் நட்போடு - தொடரும்
உன் நட்பில் நடைபோடுகிறேன் நாட்களோடு

மாயகண்ணனின் புல்லாங்குழல்  இசை 
மனதில் காதல் சொட்டவைக்கும்  ராதைக்கு
மனம் நிறைந்த நண்பன் உன் வார்த்தைகள் -தன்னபிக்கை 
மரம் வளர்க்கும் நட்போடு  இந்த தோழிக்கு 

மகிழ்ச்சியோடு மனம் நினைப்பதெல்லாம்   
காட்சியாக  தருமாம் கதைகளில் சொர்க்கம் 
என் மனம் காண்கிறது மகிழ்ச்சி நிறைந்து - என்றும்
உன் நட்பால் நிஜ வாழ்வில் சொர்க்கம்.

                           ...கவியாழினி சரண்யா ...

Sunday, 13 April 2014

ஊர்வலம்


திருவாரூர் தேர் 
நகர்ந்தால் 
அது 
நகர்வலம் 

பெண்ணே 
நீ 
அங்கு 
நடந்தால் 

அந்த தேரும் 
உன் பின் 
வரும் 
ஊர்வலம் . 

...கவியாழினிசரண்யா ...

Saturday, 5 April 2014

தா(பே)ய்மையோடு ஒரு குரல்


மும்மாரி பொழிய வைத்து 
கம்மாவும் நிரம்ப வைத்து 
முத்தாக தானியம் 
விளைய வைத்து 
சுத்தமாக சுவாசிக்க வைத்தேன் 
என் ம(மா)க்களே 

சத்தான உணவோடு 
புத்தியும் தூண்டிவிட்டு 
அறிவியலும் கற்க 
அறிவு வளர்த்தேன் 
ஆக்கங்கள் பெருகிடவே 
களிப்பும் கண்டேன் 
அழிவுகளை அதிகமாக்கி 
ஆடம்பரத்தில் அமிழ்ந்தீர்களே 
என் அன்(வம்)பிற்க்குறியவர்களே 

வண்ண உணவுகளும் 
வாகன பெருக்கமும் 
குளிர்பதன சாதனமும் 
நிமிடத்தில் நிமிரும் உற்பத்தியும் 
அபார வளர்ச்சியென்று 
அடுக்கடுக்காய் மரங்களை 
வெட்டி வாழும் 
என் பி(தொ)ள்(ல்)ளை(லை)களே 

மாடிமேல் மாடியென 
பாரத்தை என் தலையில் வைத்து 
விரைவாக சென்றுவர சுரங்கம் வைத்து 
கழிவுகளை நிரப்பிடவே 
பாதாளத்தில் கொட்டி 
வாழும் மரங்களை வெட்டி 
வலுவான என்னை 
வலுவிழக்க வைத்தீர் 
என் செல்வ(ஜென்ம )ங்களே 

வலி பொருத்து வாழ வைத்தேன் 
வலி தாங்க முடியாமல் போகவே 
பேரழிவுதர ஆட்ப்படுத்தப்பட்டேன் 
இனி என் நிலை என் கையிலில்லை 
வசதிதேடி வாழுமுன்னே - இயற்கை 
வளம் காத்து வாழ்வை வாழப்பாருங்களேன் 
என் மதி(கெ )கொண்(ட்)ட மானிட(ரே)னே. 
  ...கவியாழினிசரண்யா... 


Thursday, 20 March 2014

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

  
பணப்பெட்டி 
வாங்க 
ஆசைகொண்டு 

தீப்பெட்டி 
அடுக்கி 
வாழ்ந்து 

ரண(ம்)கெட்டியாக 
நிலை 
கடந்து 

கனபெட்டியாய் 
செல்ல 
முடிகிறது 

எங்கள் 
வாழ்க்கை 
சவபெட்டியில். 

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

...கவியாழினி...

Wednesday, 12 March 2014

எல்லையற்ற கடலின் ஓர் அலை


பத்துமாதமாய் வயிற்றில் 
தங்கி பிறந்தவனெ(ளெ)ன்றா 
மொத்தமாக கயிற்றில் 
உயிரை விட வந்தாய் ---இல்லை 

ஒரு துளி விந்தில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒரு துளி விசத்தில் உயிரை 
மரிக்க துணிந்தாய் ---இல்லை 

இருவரின் சக்தியும் ஒன்றாகி 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒருவனா(ளா)ய் கத்தியில் 
உயிரை பிரிக்க வந்தாய்---இல்லை 

உன் பெற்றோரின் உடல் 
சூட்டில் பிறந்தவனெ(ளெ)ன்றா 
நெருப்பின் சூட்டில் 
பஸ்பமாக வந்தாய் ---இல்லை 

பனிக்குட நீரில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
பலகுட நீரென கடலில் 
மூழ்க வந்தாய் ---இல்லை 

தலைகீழாய் இவுலகில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
தலைகீழாய் மலையில் 
விழ வந்தாய் ---உணர்வாயோ 

இரு உடல்களின் காமத்தால் 
பிறக்கவில்லை நீ 
இரு உள்ளங்களின் சங்கமத்தால் 
மண்ணில் பிறந்தாய் 

உள்ளுறுப்புக்களின் மாற்றத்தால் 
பிறக்கவில்லை நீ 
உணர்வுகளின் உச்சத்தில் 
உலகில் பிறந்தாய் 

வாழ்வின் வலி தாங்காமல் 
வந்தாயே உயிர் விட 
நினைப்பாயோ ஒருநிமிடம் 
உன்னை உயிரோடு ஈன்றெடுக்க 
உன் தாய் அனுபவித்த வலியை-அதை 
தாண்டியா உன் வாழ்க்கை வலிக்கிறது ? 

உற்றவள் உள்ளிருந்து துடிக்க 
தன்னிலையறியாது தவித்த 
உன் தந்தையின் தவிப்பின் 
வலியை விடவா 
உன் வாழ்கை வலிக்கிறது ? 

சிறு உயிரான உனக்கு வலி 
பொருத்து வாழ்வு தந்த 
அந்த தாய்தந்தை வலிக்காக 
வலி நிறைந்த உன் வாழ்வை 
வாழ்ந்து காட்ட மாட்டாயோ 

வாழ்வின் எல்லை உன்னைவிட்டு 
உன் உயிர் பிரியும் வரை அல்ல 
உன் உள்ளத்தை விட்டு 
உன் தன்னபிக்கை பிரியும் வரை 

பரந்த கடலாய் இவ்வுலகினிலே 
ஓயாத அலைகலென 
எல்லோர்க்கும் ஓர் வாழ்வுண்டு 
அதில் உன் வாழ்வும் 
எல்லையற்ற கடலின் ஓர் அலை ... 

...கவியாழினிசரண்யா...

Thursday, 6 March 2014

காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே


என் முன்னோர்களின் 
எத்துனை தலைமுறைகள் தாண்டி 
இன்று நானிருக்கிறேன்? 

இந்த உலகம் ஐம்பூதங்களில் 
குடிகொண்டு வாழ்வதை 
ஆன்மீகம் என்கிறார்கள் 

இந்த உலகின் ஐம்பூதங்களை 
ஆராய்ந்து வாழ்வதை 
அறிவியல் என்கிறார்கள் 

தியானித்து உலகை மறந்து 
சமாதி நிலை அடைவதுதான் 
ஆன்மீகத்தின் உச்சமென்றால் 

எப்படியும் மனிதன் ஒரு 
தருணத்தில் சமாதி நிலைக்குத் 
தானாகவே செல்கிறானே 

நித்தம் கண்டுபிடிப்புகளும் 
அழிவுகளும் ஆராய்ச்சிகளும்தான் 
அறிவியலின் உச்சம்மென்றால் 

ஒவ்வொரு கணத்திலும் 
இவ்வுலகில் ஒன்று 
அழிவுக்குள்ளாகியும் 
புதிய கண்டுபிடிப்பாகவும் 
உருவாகிறதே ! 

ஒரு துளி விந்தின் 
வெளியேற்றந்தான் 
ஆழ்ந்த அன்பின் 
உச்சமென்றால் 

அதுவும் சிலநேரங்களில் 
திருப்தியடையாத ஒன்றாக 
மாற்றம் பெருவதேன்? 

இங்கே , 
இறப்பையும் பிறப்பையும் தாண்டி 
சூரிய சந்திர உதயமறைவை தாண்டி 
ஆன் பெண் அன்பை தாண்டி 
ஆன்மிக அறிவியலை தாண்டி 

உலகமென்னும் 
நாடக மேடையில் 
மனிதர்களென்னும் 
கதாபாத்திரத்தில் 
நித்தம் ஒரு நாடகம் 
அரங்கேறிகொண்டே 
இருக்கிறது 

தனக்கு எதிரே ஒரு சபை 
தம் நடிப்பை கண்கொட்ட 
பார்த்து கொண்டிருப்பதை 
உணர்ந்து நடிப்பவன் 
உச்சம் பெருகிறவனாகவும் , 

தானே நடிகன் 
தானே பார்வையாளனென 
நடிப்பவனை எச்சமாக 
நினைக்கவைத்தும் 
இந்த உலகம் என்றும் 
சாதா(சதா)ரணமாகவே 
இயங்கிக்கொண்டிருக்கிறது. 

காலங்கள் முடிந்த பின்பு 
ஆடிய ஆட்டங்கள் மறைந்து 
அமைதியாக செல்கிறான் 
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே... 

...கவியாழினி...